கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முலம் கடன் வழங்குவதற்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனத்துக்காக 2010-11-ம் ஆண்டுக்கு, ரூ. 7 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் தகுதி அடிப்படையில் 50 சதம் வரை மானியம் அளிக்கப்படும்.நெல், கரும்பு, வாழை, காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், போன்றவற்றைச் சாகுபடி செய்ய சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இந்தக் கடன் வழங்கப்படும். பொதுச் சேவை மையங்கள் இயங்கி வரும் 16 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகள் தங்களது நிலங்கள் தொடர்பான கணினிச் சிட்டா அடங்கல்களை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.
குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை உள்ளிட்ட 7 கூட்டுறவு வேளாண்மைச் சங்கங்களில் வேளாண் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் மண் பரிசோதனை, பாசன நீர் பரிசோதனை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் உரம், பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படும்.குறிஞ்சிப்பாடி, ஆயிக்குப்பம், பெண்ணாடம், தொழுதூர், முட்லூர், கருங்குழி, தீர்த்தனகரி, கரைமேடு, மோவூர், ஆவினன்குடி, சேத்தியாத்தோப்பு, வி.சாத்தமங்கலம் ஆகிய 12 தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாய சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான பண்ணை இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படுகிறது. பண்ணை இயந்திர மயமாக்கல் திட்டம் இவ்வாறு செயல்படுத்தப்படுகிறது.
விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறையைப் சமாளிக்கும் வகையில், கரைமேடு, ஆய்க்குப்பம், கருங்குழி, தீர்த்தனகரி, குறிஞ்சிப்பாடி ஆகிய 5 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், கூட்டுப் பொறுப்புக்குழு, சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, பசுமை ராணுவம் அமைக்கப்பட்டு உள்ளது. வேளாண் இயந்திரங்களில் பயிற்சி பெற்ற இவர்களைக் கொண்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு இயந்திரம் மூலம் நடவு பயிற்சி அளிக்கப்படும். பசுமை ராணுவம் மூலம் 500 ஏக்கரில் இயந்திரம் மூலம் நடவு செய்ய திட்டமிட்டு, 140 ஏக்கரில் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டு உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக