உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 21, 2010

என்.எல்.சி. ஸ்டிரைக்கினால் மின் உற்பத்தி பாதிப்பில்லை : நிதித்துறை இயக்குநர்


நெய்வேலியில் பேட்டியளிக்கும் என்எல்சி நிதித்துறை இயக்குநர் சேகர். உடன் (இடமிருந்து) நிர்வாகத் துறை பொது மேலாளர் பெஞ்சமின் ராயப்பன் மற்றும் முதன்மை மேலாளர் தியாகராஜன்
 
நெய்வேலி:

                 நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தால் உற்பத்தி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை எனவும், நிரந்தரத் தொழிலாளர்களும், பொறியாளர்களும், அதிகாரிகளும் முழு ஒத்துழைப்புடன் பணியாற்றுவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் சேகர் திங்கள்கிழமை கூறினார்.

                   என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நிறுவனத்தின் நிர்வாகத் துறையின் கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிதித்துறை இயக்குநர் ஆர்.சேகர் திங்கள்கிழமை  அளித்தப் பேட்டி: 

                      "13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பல்வேறு வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்கிறது. ஒவ்வொரு ஒப்பந்தத் தொழிலாளிக்கும் அவருக்கு அளிக்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும் கூடுதலாக நாளொன்றுக்கு ரூ.270 முதல் 300 வரை நிர்வாகம் செலவு செய்கிறது. நாட்டில் உள்ள அனைத்து பொதுத் துறை நிறுவனங்களைக் காட்டிலும் என்எல்சியில்தான் அதிகப்படியான ஊதியம் வழங்கப்படுகிறது.

                    16-06-08 அன்று புதுதில்லியில் ஏற்பட்ட உடன்படிக்கையை அமல்படுத்த நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் என்எல்சியில் கூடுதலாக நாளொன்றுக்கு ரூ.28.85 வழங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையாக மருத்துவச் சிகிச்சைகள் பெறுவதை வகைசெய்யும் பொருட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 50 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சைப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

              இந்நிலையில் 19-09-10 அன்று மத்திய அரசின் உதவித் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில், நிர்வாகத்தின் நிலையை ஏற்றுக் கொண்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்தது.÷ஆனால் அதற்கு மாறாக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்கள் செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடக்கியுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு  விரோதமானது.

                மேலும் மத்திய அமைச்சர் முன்னிலையில் 16-06-08 அன்று ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொழில் அமைதியையும், நல்லுறவையும் காப்போம் என தொழிற்சங்கங்கள் உறுதியளித்தன.÷ஆனால் அந்த ஒப்பந்தத்துக்கு மாறாக தற்போது வேலைநிறுதத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைநிறுத்தத்தை கைவிட்டு, தங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன்கருதி உடனடியாக பணிக்குத் திரும்பவேண்டும். தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என சேகர் கேட்டுக் கொண்டார்.

                        பேட்டியின் போது, நிர்வாகத் துறை பொதுமேலாளர் பெஞ்சமின் ராயப்பன், துணைப் பொதுமேலாளர் பெரியசாமி, முதன்மை மேலாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior