உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 21, 2010

தஞ்சைப் பெரிய கோயிலின் முன்மாதிரி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்


சுதைகளால் ஆன திருவதிகை கோயில் விமானம் (கோப்புப்படம்).
 
பண்ருட்டி:

                 பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் கருவறை விமான அமைப்பைப் பார்த்து, அதே சாயலில் தஞ்சைப் பெரிய கோயில் கருவறை விமானத்தை இராஜராஜசோழன் கட்டியுள்ளதாக வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியுள்ளார். 

               கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் திருவதிகையில் ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சங்க காலப் புகழ் படைத்ததும், முதன்முதலில் தேவாரம் பாடப்பட்டதும், முதல்முதலில் தேர் உருவான திருத்தலமாகவும் திருவதிகை வீரட்டானம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.  பஞ்ச பாண்டவருள் ஒருவரான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டு தென்னகம் வந்தபோது திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரரைக் கண்டு கைதொழுதான் என வில்லிபாரதப் பாடல் கூறுகிறது. 

                         இத்தகைய பெருமைகளைக் கொண்ட திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலைக் கண்ட பிறகே அதே அமைப்பில் தஞ்சை பிரகதீசுவரர் கோயிலை இராஜராஜ சோழன் கட்டினார் என்று கூறப்படுகிறது. 

இது குறித்து தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியது: 

                  சிற்பக் கலைகளிலும், கட்டடக் கலைகளிலும் புதுமைகளைப் படைத்தவர்கள் பல்லவ மன்னர்கள் என்பது வரலாற்று உண்மை. பல்லவர்களுக்கு பின் ஆட்சி பிரிந்த சோழ மன்னர்களும் உலகம் போற்றும் உன்னதமான கலைப் படைப்புகளை உலகுக்குப் படைத்தளித்துச் சென்றுள்ளனர். அவற்றில் 1000-வது ஆண்டு விழா காணப்பெறுவதும், உலகோரால் போற்றிப் பாராட்டப்படுவதுமான அதிசயம் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் ஆகும். சென்ற இடமெல்லாம் வெற்றிமேல் வெற்றிகளைப் பெற்ற சோழ மாமன்னன் இராஜராஜனின் (கி.பி. 985-1014) ஆட்சிக் காலத்தில்தான் இந்த மகோன்னதக் கலைப் படைப்பான தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. 

                 கி.பி 1003-ல் தொடங்கப்பட்டு கி.பி 1009-ல் இக்கோயில் நிறைவுபெற்றது. 190 அடி உயரமுள்ள கருவறை விமானம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 35 சிறு கோயில்கள் அடங்கிய சிறப்பம்சங்களைக் கொண்டது. முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டது.  இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில், தஞ்சைப் பெரிய கோயிலை முன்மாதிரியாகக் கொண்டு கி.பி. 1030-ல் ஒரு சிவன் கோயிலைக் கட்டி கங்கை கொண்ட சோழீச்சுரம் எனப் பெயர் சூட்டினார். 100 அடி அகலம், 340 அடி நீளம், 160 அடி உயரமுள்ள விமானச் சிகரம், அதனைச் சுற்றிலும் அழகிய சிற்பங்கள் அமையப்பெற்ற அற்புதக் கோயிலாக இன்றும் போற்றப்படுகிறது. இக்கோயிலும் கருங்கற்களால் கட்டப் பெற்றது. 

               ஆனால் இவ்விரண்டு கோயில்களுக்கும் முன்மாதிரியாக அமைந்த கோயிலே திருவதிகை வீரட்டானம். இக்கோயில் அமைப்பைக் கண்ட பிறகே தஞ்சையில் பெரிய கோயிலை இராஜராஜ சோழன் கட்டினான். பல்லவர்களின் ஆட்சி தொடக்கத்தின் போது தமிழகத்தில் 300 சிவன் கோயில்கள் மிகச்சிறிய அளவில் மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்டிருந்தன. இவற்றைக் கருங்கற்கள், செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சுதை போன்றவற்றைப் பயன்படுத்தி  மாற்றியமைத்தது மட்டுமின்றி, மேலும் நூற்றுக்கணக்கான புதிய கோயில்களை சோழர்கள் கட்டினர். இவற்றில் ஒன்றுதான் திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில். அட்ட வீரட்டானங்களிலும் தனித்தன்மை வாய்ந்த விமானம் இங்குதான் அமைந்துள்ளது. 

                பல்லவ மாமன்னன் மகேந்திரவர்மன் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்த பிறகு, அவனுக்கு பிறகு ஆட்சி புரிந்த பரமேஸ்வரவர்ம பல்லவன் கருங்கற்கள் அமைப்பினால் கருவறையைக் கட்டி, செங்கல் சுண்ணாம்புச் சுதையால் விமானத்தை எழுப்பி அதில் அழகிய சிற்பங்களை அமைத்த பெருமை உடையவன். கி.பி 720-725-க்குள் கருவறையும், விமானமும் கட்டப்பட்டு விட்டன. பல சிறிய கோயில்களைக் கொண்ட இந்த கருவறை விமானம் 100 ச.மீ. பரப்பளவின் மீது 10.2 மீட்டர் நீளமும், 9.8 மீ. அகலமும் கொண்ட கருங்கற்களால் ஆன அதிட்டானத்தின் மீது உள்ள விமானம் 100 அடி உயரம் கொண்டது. அடிப்பாகத்தில் இருந்து உச்சிவரை சுதைச் சிற்பங்களைக் கொண்டது. இதுபோல் வேறு எங்கும் காண முடியாது. 

                             இந்த விமானம் பலமலைக்கோயில் என்கிற வகையைச் சேர்ந்தது. பல்லவர் கலையின் கொடுமுடி என்கிற பெருமையைப் பெற்றது' என்றார் பண்ருட்டி தமிழரசன்.

2 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior