சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பியுள்ள விவசாயிகளுக்கு விதிமுறைப்படி பங்குத் தொகை மற்றும் சர்க்கரை விநியோகம் வழங்கப்படாததால் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முறையற்ற நிர்வாகப் போக்கினால் லாபத்தில், கரும்பு உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்குத் தொகை வழங்கப்படாததால் பொருளாதார நஷ்டத்தில் சிக்கி தவிக்கின்றனர். 2004-ம் ஆண்டு அரவைப் பருவத்திலிருந்து 2010-ம் ஆண்டு அரவைப் பருவம் வரை ஆலை ஈட்டிய லாபம் |27 கோடியாகும். கூட்டுறவு விதிமுறைப்படி கரும்பு சப்ளை செய்தவர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் எத்தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும் 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை மாநில அரசின் ஆதரவு விலை கொடுக்காததால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 16 கோடியாகும். எத்தனால் ஆலை நிறுவ, கரும்பு விவசாயிகளிடம் பிடித்தம் செய்த 337 லட்சம் பெறப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் எத்தனால் ஆலை தொடங்கப்படவில்லை.
இது குறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் கே.ஆதிமூலம் தெரிவித்தது:
ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சர்க்கரை விநியோகம், சரியாக வழங்கப்படவில்லை. ஒரு தலைபட்சமாக பாதி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதி பேருக்கு வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் விதைக் கரணைகள் வழங்கியதில் சரியான கொள்கையை பின்பற்றாததால் விவசாயிகளுக்கும், ஆலைக்கும் பெருத்த நஷ்டமும், கரும்பு உற்பத்தியில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
கரும்பு உற்பத்தி செய்து ஆலை இயங்க ஆணி வேராக உள்ள கரும்பு விவசாயிகளின் உரிமைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே ஆலை நிர்வாகத்தின் செயல்பாட்டையும், கொள்முதல் செயல்பாட்டையும் தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்தி, ஆலை நிர்வாகம் லாபத்துடன் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக