கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சட்ட மேலவைத் தேர்தலுக்கு, வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.
ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்ட மேலவை அமைய தொகுதி எல்லை நிர்ணயம் செய்து, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு வெளியிட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்பு தொகுதியாக கடலூர் மாவட்ட எல்லையும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு என விழுப்புரம், சேலம், நாமக்கல் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வடக்கு மத்திய ஆசிரியர்கள் தொகுதி எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் வாக்காளர் பதிவு அதிகாரியாகவும், அந்தந்த மாவட்ட சார் ஆட்சியர்கள், உதவி ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளாகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
விண்ணப்பப் படிவங்களை, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். பட்டதாரித் தொகுதிக்கு படிவம் 18, ஆசிரியர் தொகுதிக்கு படிவம் 19. வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதி நாள் 1-11-2010. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 1-10-2010 முதல் 6-11-2010 வரை நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களால் பெறப்படும். மேலும் 16-10-2010, 17-10-2010, 30-10-2010, 31-10-2010 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தி, மனுக்கள் பெறப்படும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களுடன் தகுதிக்கான சான்று நகல்கள் இருப்பிடத்துக்கு ஆதாரமாக ரேஷன் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வருமான வரி செலுத்துவதற்கான அடையாள அட்டை, தொலைபேசிக் கட்டண ரசீது, மின் கட்டண அட்டை, எரிவாயு சிலிண்டர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும்.
பட்டதாரித் தொகுதிக்கு வாக்காளர்கள் 1-11-2010-ம் தேதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஆசிரியர் தொகுதிக்கு வாக்காளர் தகுதி, 6 ஆண்டுகள் துண்டிப்புகளுடனும், 3 ஆண்டுகள் தொடர்ந்தும் இடைநிலை ஆசிரியர் தரத்துக்குக் குறையாத பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதற்கு கல்வி நிறுவனத் தலைவரால் சான்று அளிக்கப்பட வேண்டும். வாக்காளர் பதிவுக்கு, வாக்காளர் பதிவு அலுவலரிடம் அசல் சான்றுகளைக் காண்பித்து, திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக