உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 05, 2010

விருத்தாசலத்தில் சினிமா பேனர்களுக்கு கட்டுப்பாடு வருமா?


 
விருத்தாசலம்:
 
             விருத்தாசலத்தின் முக்கியப் பகுதியான பஸ் நிலையம் அருகில் திரைப்பட பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து மற்றும் வணிகர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  
 
                விருத்தாசலம் பஸ் நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வழியாகத்தான் விருத்தாசலம் ரயில்வே ஜங்சனுக்குச் செல்ல முடியும். மேலும் பஸ் நிலையம் அருகில் அரசு கலைக் கல்லூரி, தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் உள்ளன. இதனால் பஸ் நிலையம் அருகில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைக் கருத்தில் கொண்டும், விருத்தாசலம் நகரை அழகுபடுத்தும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  
 
              இந்நிலையில் பஸ் நிலையம் அருகிலேயே உள்ள திரையரங்கத்தில் அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட திரைப்படத்துக்காக செப்டம்பர் 27-ம் தேதி முதல் பெரியபெரிய சாரங்கள் அமைத்து பிரம்மாண்டமான டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை தற்போது 200 மீட்டர் நீளத்துக்கும் மேல் நகரின் பிரதான சாலையான ஜங்சன் சாலையில் வைக்கப்பட்டுள்ளன.  இவ்வாறு மிகப்பெரிய அளவில் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் வணிகர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 
 
                இதோடு மட்டுமல்லாமல் விருத்தாசலம், சேலம் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், இச்சாலையில் கனரக வாகனங்கள், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, விருத்தாசலம் ஜங்சன் சாலை, எருமனூர் வழியாக இயக்கப்படுகின்றன.  இதனால் ஜங்சன் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும். நிலைமை இவ்வாறு இருக்கும்போது இதே சாலையில் சாரங்கள் அமைத்து அதிக அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருப்பது போக்குவரத்துக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.  
 
இதுகுறித்து ஜங்சன் சாலையில் கடை வைத்திருக்கும் வியாபாரி கூறியது:  
 
                 ஜங்சன் ரோட்டில் தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து பாதிப்பு உண்டாகிறது. இதனால் சிறுசிறு விபத்துகளும் உண்டாகின்றன. இந்நிலையில் இதுபோன்று பெரியபெரிய பேனர்கள் வைத்திருப்பதால் அதிகமான விபத்துகளும், விற்பனை பாதிப்பும் ஏற்படும் என தெரிவித்தார்.  
 
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான ஈரநிலம் அமைப்பின் தலைவர் ஓவியர் தமிழரசன் தெரிவித்தது:  
 
               தற்போது எல்லா நிகழ்ச்சிகளிலும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது கலாசாரமாக மாறி வருகிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்று மெகா சைஸ் பேனர்கள் வைப்பதால் சுற்றுச்சூழல் அதிக பாதிப்புள்ளாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனெனில் பேனர்களை மிக அதிக நீளத்துக்கு வைக்கும்போது காற்று ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்குச் செல்வது தடைபடுகிறது. மேலும் இவை மறுசுழற்சிக்கும் உள்படுத்தப்படுவதில்லை. 
 
                 இதனால் அவை தேக்கம் அடைந்து மண்ணின் தன்மையை பாதிக்கும் என்பதே உண்மை. மேலும் நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட்டதா என்பதும் கேள்விக்குறியதே என தெரிவித்தார்.  உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் முறையான அனுமதி இருந்தாலும், 5 நாள்கள் மட்டுமே பேனர்களை வைக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இவை கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை.  
 
                 எனவே விதியை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்பதும், வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் டிஜிட்டல் பேனர்களை தடைசெய்வது குறித்து விவாதித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும். அரசு இதற்கு செவிசாய்க்குமா?

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior