சிதம்பரம்:
தமிழகத்தில் நெற் பயிருக்கு போதிய விலை கிடைக்காததால் அதற்கு மாற்றாக தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்வதில் தற்போது தமிழக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தோட்டக்கலை பயிரான சர்க்கரைக் கிழங்கு சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலை. தோட்டக்கலைத் துறை முனைவர் ப.மதனகுமாரி தெரிவித்தது:
சர்க்கரைக் கிழங்கு பயிரானது பார்ப்பதற்கு முள்ளங்கி செடிபோல தோன்றும் ஒரு கிழங்கு வகைப்பயிர். இக்கிழங்கில் 12 முதல் 15 சதவீதம் வரை சர்க்கரை சத்து உள்ளது. உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் 45 சதவீதம் இப்பயிரிலிருந்து பெறப்படுகிறது.
இப்பயிர் சம தட்பவெப்ப நிலை உள்ள தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம். இதற்கு நீர்தேவை குறைவு. வெப்ப மண்டல பகுதிகளுக்கு ஏற்ற ரகங்களான பசோடா, ஹெச்.ஐ. 0064 மற்றும் டோராடி என்ற ரகங்களை விவசாயிகள் பயிரிடலாம். தற்போது சர்க்கரைக் கிழங்கு விதைகள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து சில விதை நிறுவனங்கள் விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளன.
ரபுட்டாசி-ஐப்பசி மாதங்கள் (குளிர்காலம்) இப்பயிரைப் பயிரிடும் பருவங்களாகும். 6.5 முதல் 8.5 கார அமிலத்தன்மை உள்ள மண் வகைகள் மிகவும் ஏற்றவை. ளர் மற்றும் உவர் நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். ஏக்கருக்கு 20 ஆயிரம் விதைகள் (600 கிராம்) கொண்ட 2 பைகள் தேவைப்படும்.
விதைப்பு:
விதைக்கு விதை 20 செ.மீ. இடைவெளி விட்டு குழிக்கு ஒரு விதை வீதம் 2 செ.மீ. ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும். மண் பரிசோதனை செய்து உரமிடல் வேண்டும். மண் பரிசோதனை செய்ய வாய்ப்பு இல்லாத நிலையில் ஏக்கருக்கு தொழுஉரம் 10 ஆயிரம் கிலோ, தழைச்சத்து 30 கிலோ, மணிச்சத்து 24 கிலோ, சாம்பல் சத்து 24 கிலோ ஆகியவை அடியுரமாக இட வேண்டும். மேலும் விதைத்த 30-வது நாளில் முதல் மேலுரமாக தழைச்சத்து 15 கிலோவும், விதைத்த 60-வது நாளில் இரண்டாம் மேலுரமாக 15 கிலோ தழைச்சத்தும் இடவேண்டும்.
களை நிர்வாகம்:
பெண்டிமெத்லின் (15 லிட்டர் ஸ்டேம்ப்) களைக்கொல்லியை 300 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 3-வது நாளில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். விதைத்த 25-வது நாளிலும், 50-வது நாளிலும் கைகளால் மண் அணைக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்:
களிமண் கலந்த மண் வகைகளுக்கு 8-10 நாள்களுக்கு ஒரு முறையும், வண்டல் மண் சார்ந்த மண் வகைகளுக்கு 5-7 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைகளை விதைக்கும் முன்பு மண்ணில் போதுமான ஈரம் இருத்தல் அவசியம். நோய் மேலாண்மை: இலைப்புள்ளி நோய், அடிச்சாம்பல் நோய், பூசாரியம் மஞ்சள் இலை நோய் மற்றும் செடி அழுகல் நோய் ஆகியன தாக்கலாம். நோய்களை கட்டுப்படுத்த ஊடுருவும் பூஞ்சான நோய் தடுப்பு மருந்துகளை இரண்டு முறைகள் 3-வது மற்றும் 5-வது வாரத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை:
சர்க்கரைக் கிழங்கு ரகத்தின் சராசரி வயது 5 முதல் 6 மாதம். முதிர்ந்த செடியில் அடியிலுள்ள வெள்ளி அடுக்கு கீழ் இவைகள் வெளிறிய மஞ்சள் நிறம் அடையும் போது அறுவடை செய்யலாம். சர்க்கரை மானி (பிரிக்ஸ் மீட்டர்) மூலம் சர்க்கரை சத்து 15-18 விழுக்காடு வந்தவுடனும் கிழங்குகளை அறுவடை செய்யலாம்.
பயன்கள் மற்றும் முக்கியத்துவம்:
எரிசக்திக்கு பயன்படும் எத்தனால் எடுக்க மூலப்பொருளாக பயன்படுகின்றது. சர்க்கரைக் கிழங்கின் கழிவுப் பொருள்களான இலைகளையும் மற்றும் கிழங்கு கூழையும் மாட்டுத் தீவனமாக உபயோகிக்கலாம். எரிசக்தியின் தேவை அதிகரித்த இன்றைய நிலையில் இக்கிழங்கில் இருந்து கிடைக்கும் எத்தனால் மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி அளவுக்கு அன்னிய செலாவணி மீதப்படுத்தலாம். எத்தனால் தேவை எப்போதும் இருப்பதால் சர்க்கரை ஆலைக்கு தொடர்ந்து மூலப்பொருள்கள் கிடைத்து ஆலைகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பும் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக