உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 16, 2010

கடலூர் மாவட்டத்தில் ரூ.1.8 கோடி செலவில் கட்டிய போலீஸ் குடியிருப்பு வீணாகிறது

 கடலூர் : 

           திறப்பு விழா நடந்து நான்கு மாதங்களாகியும் போலீசார் எவரும் குடியேறாததால் 1.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்புகள் பூட்டிய நிலையிலேயே வீணாகி வருகிறது.

               மின் கட்டணம் செலுத்தாதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடக்கிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னையை நிலை நாட்டிடும் பொருட்டு எந்த நேரத்தில் அழைத்தாலும் பணிக்கு வர வேண்டும் என்பதற்காக போலீசார்களுக்கு அவரவர் பணிபுரியும் ஸ்டேஷன்கள் வளாகத்திலேயே அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. 

                ஆனால் தற்போது போலீசாரின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு ஏற்ப அவர்களுக்கான குடியிருப்புகள் அதிகரிக்கப்படவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான போலீசார் கிராமங்களில் உள்ள சொந்த வீடுகளிலோ அல்லது நகர பகுதிகளில் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு அருகில் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். 

               இவ்வாறு கடலூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள கடலூர் புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், துறைமுகம், தேவனாம்பட்டினம், ரெட்டிச்சாவடி மற்றும் தூக்கணாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்களில் கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே குடியிருப்பு வசதி உள்ளது. மற்ற போலீஸ் ஸ்டேஷன்களில் பணி புரியும் போலீசார்கள் அரசு குடியிருப்பு வசதியின்றி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். 

              இந்நிலையில் கடந்தாண்டு தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியம் மூலம் கடலூர் புதுநகர் மற்றும் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன்கள் வளாகத்தில் 4.67 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டது. அதில் கடலூர் துறைமுகம், கடலூர் புதுநகர், தேவனாம்பட்டினம் ஸ்டேஷன்களில் பணி புரியும் போலீசார்களுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்புகளை கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி நடந்த விழாவில் டி.ஐ.ஜி., மாசானமுத்து முன்னிலையில் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். 

               திறப்பு விழாவைத் தொடர்ந்து நகரின் மையப்பகுதியில் உள்ள கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் குடியிருப்பில் குடியேற போலீசாரிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கடலூர் துறைமுகத்தில் 1.80 கோடி ரூபாய் செலவில் ஒரு எஸ்.ஐ., மற்றும் 36 போலீசாருக்காக கட்டப்பட்ட குடியிருப்பில் குடியேற எவரும் முன்வரவில்லை. நகரின் கடைகோடியில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதாலும், போதிய சாலை வசதி இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

              மேலும், அத்தியாவசிய தேவைக்கு நகருக்கு 2 கி.மீ., தொலைவிற்கு செல்ல வேண்டியுள்ளதாலும், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல சிரமமாக இருப்பதோடு, போக்குவரத்து செலவும் அதிகரிக்கும் என்பதால் இந்த குடியிருப்பில் குடியேற எவரும் விரும்பவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக 1.8 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 37 வீடுகள் கொண்ட இந்த குடியிருப்பில் தற்போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். மீதியுள்ள 36 வீடுகள் திறந்து 4 மாதங்களாகியும் எவரும் குடியேறாமல் வீணாகி வருகிறது. 

                4 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனால் தற்போது போலீஸ் குடியிருப்பு இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள மோசமான குடியிருப்பில் உயிரை கையில் பிடித்தபடி போலீசார் வசித்து வரும் நிலையில், இங்கு புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் குடியேற போலீசார் தயக்கம் காட்டி வருவது அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior