திட்டக்குடி :
திட்டக்குடி இந்தியன் வங்கி இடமாற்ற திறப்பு விழாவில் கிராமங்கள் தோறும் வங்கிகளின் கிளைகள் துவக்கப்பட வேண்டுமென கலெக்டர் சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்தார்.
திட்டக்குடியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்துடன் இடமாற்ற திறப்பு விழா நடந்தது. கடலூர் மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கட்டட உரிமையாளர் சேகர், அருந்ததி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சின்னராஜி முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் அனில்குமார் வரவேற்றார். தாசில்தார் கண்ணன், துயர் துடைப்பு தாசில்தார் சையத்ஜாபர், துணை மேலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏ.டி.எம். மையம் மற்றும் புதிய கட்டடத்தை திறந்து வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில்,
"பின்தங்கிய பகுதிகளில் கூடுதல் வசதிகளுடன் வங்கிகள் திறக்கப்பட வேண்டும். கிராமங்கள் தோறும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் கிளைகளை உருவாக்குவதால், வங்கிகள் மூலம் மட்டுமே வரவு, செலவுகளை பரிமாற்றம் செய்திட ஒவ்வொரு தனி நபருக்கும் எண்ணம் வரும். தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 2.5 லட்சம் குடும்பங்கள் வங்கிகளில் கணக்கு உடையவராக மாற்றப்பட்டுள்ளனர்.
வங்கிகளில் கடன் பெறுவோர் உரிய நேரத்தில் பணத்தினை செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கியிலும் காலாண்டுக்கு ஒருமுறை வாடிக்கையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்' என்றார். ராமநத்தம்: ராமநத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் கல்வி நிறுவன தாளாளர் கிருஷ்ணசாமி, முன்னோடி வங்கி அதிகாரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் கணேசன் வரவேற்றார். விழாவில் கலெக்டர் சீத்தாரமன் இந்தியன் வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்றுகளை நட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக