உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 21, 2010

கடலூர் அருகே வேன் மீது ஆம்னி பஸ் மோதல் : பள்ளி மாணவியர் 4 பேர் பலி: டிரைவர் கைது



கடலூர் : கடலூர் அருகே ஆம்னி பஸ், எதிரே வந்த பள்ளி மாணவ, மாணவியர் வேனில் மோதியதில், நான்கு மாணவியர்கள் பலியாகினர்; 30 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ் டிரைவர், கைது செய்யப்பட்டார்.

                கடலூர் அடுத்த பெரியப்பட்டு மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 19 மாணவ, மாணவியரை ஏற்றிய, தனியார் வேன் (டி என் 31 9788), நேற்று காலை, கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. செம்மங்குப்பத்தை சேர்ந்த மணிவேல் (23) வேனை ஓட்டினார். கடலூர் - சிதம்பரம் சாலையில் செம்மங்குப்பம் ஐயனார் கோவில் அருகே, காலை 7.35 மணிக்கு வேன் வந்தது. கடலூரில் இருந்து நாகார்ஜூனா ஆயில் கம்பெனி ஊழியர்கள் 15 பேரை ஏற்றி (டி என் 21 ஏ வி 0046) ஆம்னி பஸ், பெரியக்குப்பம் சென்று கொண்டிருந்தது. 

               செம்மங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்ற அரசு பஸ்சை முந்தி சென்று, திடீரென இடது பக்கமாக திரும்பிய போது, முன்னால் சைக்கிளில் சென்ற செம்மங்குப்பம் சிவலிங்கம் (60) மீது மோதியது. இதையடுத்து, ஆம்னி பஸ் டிரைவர் அருள்முருகன் (30), பஸ்சை வலதுபுறமாக திருப்ப முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் வலதுபுறம் தாறுமாறாக ஓடியது. இதை பார்த்த பள்ளி வேன் டிரைவர், வேனை ஓரமாக நிறுத்தினார். இருப்பினும் ஆம்னி பஸ், வேன் மீது பயங்கர சத்தத்துடன் மோதி, சாலையில் உருண்டது. ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் வேனின் வலதுபுறம் பெயர்ந்து, 20 மீட்டர் தூரத்தில் விழுந்தது. வேன் இருக்கையுடன் மாணவ, மாணவியர் 10 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தூக்கி எறியப்பட்டு, சாலையோர பள்ளத்தில் விழுந்தனர்.

                 இந்த கோர விபத்தில், கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவியரான திருச்சோபுரம் பெருமாள் மகள்கள் அபிராமி (15), அகிலாண்டேஸ்வரி (12), பெரியக்குப்பம் ராமச்சந்திரன் மகள் பவித்ரா (14) சம்பவ இடத்திலேயே இறந்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் நாகார்ஜூனா கம்பெனி ஊழியர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, அவ்வழியே வந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் மூலம், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

              திவ்யா (15), நிஷா (17), தரணி (11), சாந்தநேசன் (7), கனிஷ்கா (9), முகிலன் (4), சங்கவி (14), ஜெயசுதா ஆகியோர், மேல் சிகிச்சைக்காக கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ராவின் சகோதரி திவ்யா (15) இறந்தார். கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

                விபத்து குறித்து, கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, விழுப்புரம் மாவட்டம் மைலம் அடுத்த குன்னம் கிராமத்தை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் அருள்முருகனை கைது செய்தனர். இவர் கிரேன் இயக்குபவர் என்றும், வழக்கமான டிரைவர் வராததால், ஆம்னி பஸ்சை ஓட்டிச் சென்றதாக விசாரணையில் தெரிந்தது.

தொடரும் விபத்து: 

             கடலூர் - சிதம்பரம் சாலையில் செம்மங்குப்பம் பஸ் நிறுத்தத்தில், விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. இங்கு பஸ் நிறுத்தம் எதிரெதிராக உள்ளன. இங்கு பயணிகளை இறக்கிவிட நிற்கும் பஸ்சிற்கு பின்னால் வரும் வாகனங்கள், முந்தி செல்ல முயலும் போது, எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன. தற்போது நடந்த விபத்தும், இவ்வாறே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் பயணிகளை இறக்கிவிட, பஸ் நிறுத்தத்தை விரிவுபடுத்தினால், விபத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது.

மனித நேயமற்ற பள்ளி நிர்வாகம்: 

             கோர விபத்தில் பள்ளி மாணவியர்கள் நான்கு பேர் இறந்த போதிலும், பள்ளி வழக்கம் போல் இயங்கியது. விபத்து நடந்த தகவல் அறிந்த மாணவியர்களின் பெற்றோர் பலர் அலறி அடித்துக்கொண்டு பள்ளியில் குவிந்ததால் பதட்டம் நிலவியது. பெற்றோர் பலர் தங்களது மகள்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், பள்ளி நிர்வாகம் விடுமுறை விடாமல், போலீஸ் பாதுகாப்புடன் பள்ளியை இயக்கியது. 

இது குறித்து சி.இ.ஓ., அமுதவல்லி கூறியது 

                  "தற்போது அரையாண்டு தேர்வு நடப்பதால் மாணவியர்கள் பலர் காலையிலேயே பள்ளிக்கு வந்து விட்ட நிலையில், திடீரென விடுமுறை அறிவித்தால் மாணவியர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பல்வேறு சிக்கல் ஏற்படும். ஆகவே தான், பள்ளிக்கு விடுமுறை விடவில்லை' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior