சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறை சார்பில் இயற்கை பொருட்கள் மற்றும் உயிர் மருத்துவ தொழில் நுட்பம் என்னும் தலைப்பில் 3 நாட்கள் நடக்கும் சர்வதேச கருத்தரங்கு தொடக்க விழா பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் நடந்தது.
விழாவுக்கு துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கினார். புதுடெல்லி தேசிய மூலிகை கழக ஆலோசகர் லவேக்கர் சிறப்புரையாற்றினார்.உயிர் வேதியியல் துறை தலைவர் புகழேந்தி வரவேற்றார். அறிவியில் துறை முதல்வர் கண்ணப்பன், கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்கை மத்திய திட்டமிடல் , கலாசாரம் மற்றும் பாராளுமன்ற விவகார துறை மந்திரி நாராயணசாமி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது மத்திய திட்டமிடல் , கலாசாரம் மற்றும் பாராளுமன்ற விவகார துறை மந்திரி நாராயணசாமி கூறியதாவது:-
உயிர் வேதியியல் தொழில்நுட்ப துறைக்கு 2011-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1222 கோடி தேவைப்படுகிறது. இருப்பினும் நாம் அனைத்து விதமான ஆராய்ச்சிக்கும் பட்ஜெட்டில் ஒரு சதவீதற்கு மேலாக ஒதுக்கீடு செய்கிறோம்.சென்னையில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், அறிவியல் ஆராய்ச்சியில் அதிக அளவில் ஈடுபடுகிறோம். ஆனால் இந்த ஆராய்ச்சியின் பலன்கள் மக்களிடையே சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று கூறினார். இதே கருத்தை தான் நானும் கூறுகிறேன். பரிசோதனை கூடங்களில் செய்யப்படும் ஆராய்ச்சியின் பயன்கள் மக்களுக்கு உடனடியாக சேர வேண்டும்.இந்தியாவை பொருத்தவரை 3 விஷயங்களில் நாம் கவனத்தை செலுத்த வேண்டியதுள்ளது. இருதய நோய், புற்றுநோய், நீரிழிவுநோய் ஆகிய நோய்களினால் நாம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
இந்த நோய்களை கட்டுப்படுத்த உயிர் வேதியியல் துறை மூலம் கூடுதல் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.மக்கள் தொகை அடிப்படையில் ஆராய்ச்சிக்கு நோய்கள் சவாலாக உள்ளது. குறிப்பாக மலைவாழ் மக்கள் அவர்களுக்கு கண்கள் தெரியவில்லை என்பது கூட தெரியாமல் உள்ளனர். இவர்களுக்கும் உயிர் வேதியியல் துறை மூலம் இதை சரி செய்ய வேண்டும். இந்திய எம்.பி.க்கள் கமிட்டி குழு விண்வெளி சம்பந்தமான ஆராய்ச்சி அறிக்கையை பிரிட்டீஷ் எம்.பி.க்களிடம் கொடுத்த போது அவர்கள் இந்த அறிக்கைகளை விஞ்ஞான ரீதியில் உள்ளதாக பாராட்டினர். ராமர் பிள்ளை கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் கற்பூரம், மண்எண்ணை, சில தழைகளை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதை தவறு என்பதை நாங்கள் நிரூபித்து உள்ளோம். 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளி, அணுசக்தி துறையில் நான் உறுப்பினராக உள்ளேன்.இதில் அண்ணா மலை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொள்ள இருந்தால் அதனை நிறைவேற்றி தர ஏற்பாடு செய்வேன்.இந்தியாவில் 6 இடங்களில் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.உயிர் வேதியியல் துறைக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சல் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
பிற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது நமது நாட்டில் மருந்து விலை குறைவாக உள்ளது. மலேரியா, யானைக்கால் போன்ற நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்துகள் கிராமப்புற அளவில் இன்னும் சென்றடையவில்லை.இதை கிராமப்புறங்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய இணை மந்திரி நாராயணசாமி பேசினார்.
ஆய்வு கட்டுரைகள் விழாவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், மலேசியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர்.இதில் 300-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. விழாவில் இணை பேராசிரியர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் உள்பட துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக