உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 12, 2011

கடலூர் அருகே மீன்பிடி துறைமுகத்திற்கு எதிர்ப்பு

கடலூர் : 

            கடலூர் அருகே புதுச்சேரி மாநில எல்லையில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி துறைமுக திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

              புதுச்சேரி மாநிலம் முள்ளோடையில் இருந்து கிழக்கே 4 கி.மீ., தொலைவில் கடலோரத்தில் உள்ளது புதுக்குப்பம் மீனவ கிராமம். இக்கிராமத்திற்கும், கடலூர் மாவட்டம் சுபா உப்பலவாடி கிராமத்திற்கும் இடையில் உப்பனாறு ஓடுகிறது. மழை வெள்ளக் காலங்களில் பெண்ணையாற்றில் பெருகும் வெள்ள நீர் சுபா உப்பலவாடிக்கும், தாழங்குடாவிற்குமிடையே உள்ள முகத்துவாரம் வழியாக கடலில் வடிய வைப்பது வழக்கம். 

               வெள்ளம் வடிந்த சில நாட்களில் கடல் அலையால் இந்த முகத்துவாரம் தாமாகவே தூர்ந்து விடும். வெயில் காலங்களில் கடல்நீர் அதிகளவு உட்புகாமல் தடுக்கப்பட்டு விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. தற்போது புதுக்குப்பம் மீனவ கிராமத்தில், புதுச்சேரி அரசு மீன்பிடி துறைமுகம் அமைத்து வருகிறது. இதற்காக இரு மாநில எல்லைக்கு மத்தியில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி ஆழப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் வழியாக கடல் நீரை உட்புகச் செய்து, அதன் வழியாக விசைப் படகுகள் உப்பனாற்றுக்குள் நுழைந்து மீன் விற்பனை தளத்திற்கு வந்து செல்லும்படி அமைக்கப்படுகிறது. 

                 இதன் காரணமாக உப்பனாற்றின் இரு கரையோரமும் பயிர் செய்து வரும் விவசாய நிலங்கள், கடல் நீரால் பாதிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக சுபாஉப்பலவாடி, நாணமேடு, மூர்த்திக்குப்பம், மதிகிருஷ்ணாவரம், கன்னியக்கோயில் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் முழுவதும் பாதிக்கும். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் நீர் அதிகளவில் உட்புகுந்து விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் புதுச்சேரி, கடலூர் மாவட்ட எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

                  விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியை சேர்ந்த நல்லாட்சிக்கான கூட்டமைப்பு சார்பில் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். இருப்பினும் அரசு இதுவரை செவி சாய்க்காததால் 30 கிராம மக்கள் ஒருங்கிணைந்து போராட தயாராகி வருகின்றனர். இது தொடர்பாக வரும் 29ம் தேதி பாகூரில் மாநாடு நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

                   இதற்கிடையே சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த ஸ்ரீதரன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் மீன்பிடி துறைமுகத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கியுள்ளார். புதுச்சேரி அரசு இப்பிரச்னை மீது முறையான நடவடிக்கை எடுக்காவிடில் விவசாயிகளின் போராட்டம் தவிர்க்க முடியாததாகி விடும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior