உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 22, 2011

விருத்தாசலம் அருகே 1,000 ஆண்டுக்கு முந்தைய சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு




பண்ருட்டி: 
         கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே, 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய, சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

          கடலூர் மாவட்டம், பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் மற்றும் புதுப்பேட்டை கோவிந்தன் ஆகியோர், விருத்தாசலத்தை அடுத்த, 11 கி.மீ., தூரத்தில் முகாச பேரூரில் உள்ள, பெருமாள் கோவிலின் சுற்றுப் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, தனியாருக்குச் சொந்தமான நிலத்தில், கி.பி.,10ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமண தீர்த்தங்கரரின் சிற்பத்தை கண்டு பிடித்தனர்.

இது பற்றி தமிழரசன் கூறியதாவது

            இச்சிலையை இப்பகுதி மக்கள் புத்தர் சிலை என்று கூறியும், நம்பியும் வந்துள்ளனர். ஆனால், இது தீர்த்தங்கரர் சிலை என கண்டறியப்பட்டுள்ளது. பலகைக் கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பம், 120 செ.மீ., உயரமும், 92 செ.மீ., அகலமும் கொண்டது. மூக்கும், வாய்ப் பகுதியும் சிதைந்துள்ளன. தீர்த்தங்கரர்களில், 24 பேர் உள்ளனர். இவர்களின் பெயர்களை அறிந்து கொள்ள சிற்பங்களின் கீழ் அவரவர்களுக்கு உரிய சின்னங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், இச்சிற்பத்தில் அடையாளக் குறிகள் எதுவும் தென்படவில்லை.

                 பீடத்தின் மீது அமர்ந்துள்ளதாகவே படைக்கப்பட்டுள்ளது. தலைக்கு மேல் இருந்த மூக்குடையும், கலசமும் உடைந்துள்ளன. முக்குடையை அலங்கரிப்பது போன்று, வளைவான அசோக மரக்கிளையில் இலைகளும், மலர்களும் காணப்படுகின்றன. தீர்த்தங்கரரின் இருபுறங்களிலும், தேவர்கள், கவரி என்ற சாமரங்களை வீசுவது போன்றும், அதற்கு மேல்புறத்தில் இரண்டு தேவர்கள் கற்பக மலர்களை தூவுவது போன்றும் காணப்படுகிறது. தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் ஒளிவட்ட வடிவமாக பிரபை காணப்படுகிறது. 

                  தியான நிலையில் அமர்ந்து அறத்தை போதிப்பதாகக் காணப்படும் இச்சிற்பம், கி.பி.,10ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இச்சிற்பத்தின் பீடத்தின் கீழ் தரைப் பகுதியில், எருமை தலை போன்று சிதைந்து காணப்படுவதால், 12வது தீர்த்தங்கரரான வாசு பூஜ்யராக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, இங்கு இருந்த சமணர் கோவில் அழிந்து, அக்கோவில் கருவறையில் இருந்த சிற்பம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது தெரிய வருகிறது. எஞ்சியுள்ள இந்த சிற்பம் அழியாமலும் அல்லது திருடப்படாமலும் இருக்க, அரசு தொல்லியல் துறையினரால் காக்கப்பட வேண்டும். இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior