மிர்புர்:
உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய சேவக் அதிரடியாக சதம்(175 ரன்) கடந்தார். இவருக்கு பக்கபலமாக ஆடிய விராத் கோஹ்லியும் சதம் (100) விளாச, இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணை கண்டத்தில் நடக்கிறது. நேற்று மிர்புரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இந்தியா, வங்கதேச அணிகள் மோதின.
ரெய்னா இல்லை:
இந்திய அணியில் முதுகு வலி காரணமாக நெஹ்ரா இடம் பெறவில்லை. சுரேஷ் ரெய்னா, அஷ்வினும் வாய்ப்பு பெற இயலவில்லை. வங்கதேச அணியில் அனுபவ அஷ்ரபுல் வாய்ப்பு பெறாதது ஆச்சரியமாக இருந்தது. "டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
அதிரடி துவக்கம்:
இந்திய அணிக்கு சச்சின், சேவக் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். ஷபியுல் இஸ்லாம் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு பறக்க விட்டார் சேவக். இதே ஓவரில் இன்னொரு பவுண்டரி அடித்த இவர், 12 ரன்கள் விளாசினார். பின் ஷபியுல் வீசிய இரண்டாவது ஓவரில் சச்சின் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரி அடித்தார். இவர்கள் வேகப்பந்துவீச்சை வெளுத்து வாங்க, சுழல் வீரரான அப்துர் ரசாக்கை அழைத்தார் கேப்டன் சாகிப்.
சச்சின் பாவம்:
ரசாக் பந்தை தட்டி விட்ட சச்சின் ஒரு ரன்னுக்காக ஓடினார். மறுமுனையில் சேவக் மறுத்தார். இதையடுத்து சச்சின்(28) பரிதாபமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி' கொடுக்க சேவக் தனது அதிரடியை தொடர்ந்தார். அப்துர் ரசாக் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து அரைசதம் எட்டினார். காம்பிர் 39 ரன்களுக்கு அவுட்டானார். பின் மகமதுல்லா பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட சேவக் 94 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். இது உலக கோப்பை அரங்கில் இவரது 2வது சதம். ஒரு நாள் அரங்கில் 14வது சதமாக அமைந்தது. மறுமுனையில், இவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த விராத் கோஹ்லியும் அசத்தலாக ஆடினார். நயீம் இஸ்லாம் வீசிய போட்டியின் 33வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். சதம் கடந்த பின் தசைப்பிடிப்பால் சேவக் அவதிப்பட்டார். இதையடுத்து இவருக்கு "ரன்னராக' காம்பிர் செயல்பட்டார்.
சேவக் 175 ரன்:
கொஞ்சம் கூட கருணை காட்டாமல் வங்கதேச பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சேவக், அப்துர் ரசாக் வீசிய போட்டியின் 37வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு இமாலய சிக்சர் விளாசினார். இவர் 175 ரன்களுக்கு ( 14 பவுண்டரி, 5 சிக்சர்) சாகிப் அல் ஹசன் பந்தில் போல்டானார்.
அறிமுக சதம்:
தனது அறிமுக உலக கோப்பை தொடரில் அசத்திய விராத் கோஹ்லி, கடைசி ஓவரில் சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் அரங்கில் இவரது 5வது சதம். யூசுப் பதான் 8 ரன்களுக்கு வெளியேறினார். இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் எடுத்தது. கோஹ்லி(100) அவுட்டாகாமல் இருந்தார்.
முனாப் மிரட்டல்:
கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணி முனாப் வேகத்தில் திணறியது. ஸ்ரீசாந்த் தயவில், துவக்கத்தில் மட்டும் அதிவிரைவாக ரன் சேர்த்தது. பின் முனாப் பந்தில் இம்ருல் கைஸ்(34) வெளியேறியதும், ரன் வேகம் குறைந்தது. சித்திக்(37) தாக்குப்பிடிக்கவில்லை. சொந்த மண்ணில், துணிச்சலாக போராடிய தமிம் இக்பால் அரைசதம் கடந்தார். இவர் 70 ரன்களுக்கு முனாப் பந்தில் வீழ்ந்தார். கேப்டன் சாகிப் அல் ஹசன் 55 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர்(25) ஏமாற்றினார். வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 283 ரன்கள் மட்டும் எடுத்து, தோல்வி அடைந்தது.
அபாரமாக பந்துவீசிய முனாப் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை இந்திய வீரர் சேவக் தட்டிச் சென்றார். வரும் 27ல் பெங்களூருவில் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக