உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், பிப்ரவரி 23, 2011

கடலூர் கெடிலம் ஆற்றுப் பாலத்தை பலவீனப்படுத்த மணல் அள்ளும் மாட்டு வண்டிகள்!


கடலூர் கம்மியம்பேட்டை- செம்மண்டலம் இடையே கெடிலம் ஆற்றுப் பாலத்தின் அடியில் மணல் எடுக்கும் மாட்டு வண்டிகள்.
கடலூர்:

             கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பாலத்தை பலவீனப்படுத்தும் விதமாக, பாலத்துக்கு அடியிலேயே தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுகின்றன.  

           கெடிலம் ஆற்றின் குறுக்கே 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.4 கோடியில் இப் பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் அருகாமையிலும் பாலத்தைத் தாண்டி 2 கி.மீ. தூரம் வரையிலும், கடல் நீர் தேங்கி நிற்கிறது. மேலும் நகரின் சாக்கடை நீரும், ஆலைக் கழிவுநீரும் இப்பாலத்தின் அருகாமையில் தேங்கி, நகரில் சுகாதாரக் கேட்டை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.  தற்போது கடலூரில் ரூ.26 கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சிமென்ட் சாலைகள். இந்த சிமென்ட் சாலைகளை அமைக்க பெரும்பாலும் கெடிலம் ஆற்றின் கழிவு மணலையே காண்ட்ராக்டர்கள் பயன்படுத்துகிறார்கள். 

                இதுகுறித்து புகார்கள் எழுந்த போதிலும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, இதுவரை எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.  மேலும் ஆற்று மணல் முழுவதும் கெடிலம் ஆற்றுப் பாலத்துக்கு அடியிலேயே எடுப்பது, பாலத்தின் அடித்தளத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.  தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் இப்பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி மணல் அள்ளுகின்றன. இதை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் சென்று விடுகின்றனர்.  பாலத்தின் கீழ்ப் பகுதியில் அதிக ஆழத்துக்கு மணல் எடுத்து இருப்பதால், அப் பகுதி முழுவதும் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.

                 அந்த வழியாகச் செல்லும் குடிநீர் பிரதானக் குழாய்கள் எப்போதும் சாக்கடைக்குள் மூழ்கி இருக்கின்றன. பெருமளவுக்கு இங்கு மாட்டு வண்டிகள் சென்று மணல் எடுப்பதால் குடிநீர்க் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர், சுகாதாரமற்ற நிலைக்கு மாறிவருகிறது.  அதிக அளவில் இங்கு மணல் எடுத்ததன் காரணமாக, கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இப்பாலத்தின் அருகே உள்ள 50 அடி அகல இணைப்புச் சாலை துண்டிக்கப்பட்டு, அருகில் உள்ள நகர்களுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது.  தொடர்ந்து இப்பகுதியில் மணல் எடுப்பதால், இந்த மோசமான நிலை, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுப்பார்களா? 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior