சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக இந்தியா முழுவதும் அக்குபஞ்சர் மருத்துவப் படிப்புகளை தொடங்கி நடத்த ஆரோக்யா சுகாதாரக் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஆரோக்யா கல்வி நிறுவனத் தலைவர் வி.இ.கலைச்செல்வன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், ஆரோக்கியா கல்வி நிறுவன இயக்குநர் முருகையன், ஆளவை மன்ற உறுப்பினர் எம்.என்.விஜயசுந்தரம், பேராசிரியர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது:
அக்குபஞ்சர் மருத்துவத்தில் மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துவதில்லை. இதனால் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. மிகப் பழமையான இந்த மருத்துவத்தில் நமக்கு நாமே சிகிச்சை அளித்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு மருத்துவத்துக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது.
இந்த அக்குபஞ்சர் மருத்துவத்தில் தீராத நோய்களை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. வருங்காலத்தில் இந்த மருத்துவமுறைக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதால் மாணவர்கள் இந்த படிப்பை படிக்க முன்வர வேண்டும். வரும் கல்வியாண்டு முதல் ஆரோக்யா சுகாதாரக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுவதும் அக்குபஞ்சர் மருத்துவப் படிப்புகளை அண்ணாமலைப் பல்கலை. தொடங்கவுள்ளது என்றார் துணைவேந்தர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக