உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 15, 2011

2011 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 76% வாக்குப் பதிவு

          தமிழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகத் தெரிகிறது.

                அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்த வாக்குப் பதிவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் பெரிதாக நடைபெறவில்லை. இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர்.தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆனால், வாக்காளர்கள் 8 மணிக்கு முன்னதாகவே வாக்குச் சாவடிகளில் வரிசைகளில் நிற்கத் தொடங்கினர் .இளைஞர்களும், முதன் முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்திருந்தனர்.

               சென்னை கோபாலபுரத்தில் சாரதா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் முதல்வர் கருணாநிதியும், ஸ்டெல்லா மேரி கல்லூரி வாக்குச் சாவடியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வாக்களித்தனர்.சில இடங்களில் பிரச்னை: வாக்குப் பதிவு தொடங்கியதும் சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டது.சென்னையில் அண்ணா நகர், கே.கே.நகர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு உள்பட்ட சில வாக்குச் சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப் பதிவு தடைபட்டது.

                இதேபோன்று, பிற மாவட்டங்களில் சில தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டன. சிறிது நேரத்தில் அவை சரிசெய்யப்பட்டன.இயந்திரங்களில் கோளாறுகள் ஒருபுறம் இருக்க, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற புகார்கள் அதிகளவில் ஒலித்தன. ஆனால், இது கடந்த தேர்தலை விட மிகக் குறைவு என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.சில இடங்களில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் வைத்திருந்தனர். 

                வாக்களிப்பதற்கு இதுவே போதும் என நினைத்த காரணத்தால் வாக்காளர் பட்டியலில் அவர்கள் தங்களது பெயர்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்கவில்லை. அட்டையைக் கொண்டு வாக்களிக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெயர் இல்லாததால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.விக்கிரவாண்டியில்...: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. விக்கிரவாண்டி தி.மு.க. ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது."

                '49 ஓ': வாக்குச் சாவடி வளாகங்களிலேயே வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டன. இதனால், அடையாள ஆவணம் இல்லை என்ற கவலை இன்றி மக்கள் வாக்களித்தனர். அதேசமயம், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளுக்குள் வந்து செல்ல சாய்வு தளங்கள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பல வாக்குச் சாவடிகளில் செயல்படுத்தப்படவில்லை. இதனால், மாற்றுத் திறனாளிகள் பெரும் அவதிப்பட்டே வாக்குச் சாவடிகளுக்குள் சென்றனர்.

                "யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு (49 ஓ) குறித்த விளம்பரம் சுவரொட்டிகளாக வாக்குச் சாவடிகளில் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருந்தன. இதுகுறித்த விழிப்புணர்வு வாக்காளர்களில் சிலருக்கு ஏற்கெனவே இருந்த காரணத்தால், வாக்குச் சாவடிக்கு ஒருவர் வீதம் "49 ஓ' பிரிவைப் பயன்படுத்தினர். 

               நீலகிரி மாவட்டத்தில் 1,000-க்கும் அதிகமானோர் அந்தப் பிரிவை பயன்படுத்தி தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

சதவீதம் அதிகம்: 

                இந்தத் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவானதாகத் தெரிகிறது. சில மாவட்டங்களில் இருந்து முழுமையான நிலவரம் வராத நிலையில் வாக்குப் பதிவு சதவீதத்தின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. சரியாக 5 மணிக்கு வாக்காளர்கள் வரிசையில் நிற்பது நிறுத்தப்பட்டது. 5 மணிக்குள் வந்து வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டது.

                பல தொகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் மாலை 4.30 மணி முதல் 5 மணிக்கு உள்ளாக வந்தனர். இதனால், இரவு 7 மணி வரையிலும் வாக்குப் பதிவு நீடித்தது.1967 சட்டப் பேரவைத் தேர்தலில் 76.57 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுவே, தமிழக பேரவைத் தேர்தல்களில் அதிகபட்ச வாக்குப் பதிவாகும். மற்ற மாவட்டங்களின் வாக்கு சதவீதம் உறுதியாகத் தெரியும்பட்சத்தில் புதன்கிழமை பதிவான வாக்குகள் 76 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.அப்படி அதிகரித்தால், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதமே தமிழகத்தில் அதிகபட்ச வாக்கு சதவீதம் என்ற பெருமையைப் பெறும்.

மே 13-ல் வாக்கு எண்ணிக்கை: 

                தமிழகத்தில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 13-ம் தேதி எண்ணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 94 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே சரியாக ஒரு மாத கால இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது.சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 

விஐபி தொகுதிகள் வாக்குப் பதிவு 

முதல்வர் கருணாநிதி, திருவாரூர் - 75
ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் - 73
ஸ்டாலின், கொளத்தூர் - 66
விஜயகாந்த், ரிஷிவந்தியம் - 82 

வாக்கு சதவீதமும் வெற்றியும் 

                தமிழகத்தில் 1967-ல் சட்டப் பேரவைத் தேர்தலில் 76.57 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக பேரவைத் தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப் பதிவாகும். 1984 பேரவைத் தேர்தலில் 73.47 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இந்த நிலையில், 2011 பேரவைத் தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மேலும் அதிகரிக்கக்கூடும்.
  
1967-ல் இருந்து நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களின் வாக்குப் பதிவு (சதவீதத்தில்) விவரம்:

1967--76.57 (தி.மு.க. வெற்றி)
1971--72.10 (தி.மு.க. வெற்றி)
1977--61.58 (அ.தி.மு.க. வெற்றி)
1980--65.42 (அ.தி.மு.க. வெற்றி)
1984--73.47 (அ.தி.மு.க. வெற்றி)
1989--69.69 (தி.மு.க. வெற்றி)
1991--63.84 (அ.தி.மு.க. வெற்றி)
1996--66.95 (தி.மு.க. வெற்றி)
2001--59.07 (அ.தி.மு.க. வெற்றி)
2006--70.56 (தி.மு.க. வெற்றி)

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior