சிதம்பரம்:
உழைப்பால் தமிழகத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் வன்னியர் மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், ஓரணியில் இணைந்துள்ளதை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவிலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியது:
இதே மேடையில் நானும் மறைந்த சமுதாயத் தலைவர் இளையபெருமாளும் பேசியது பழைய நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. சமுதாயத்துக்காக உடல், பொருள், ஆவி ஆகியவற்றை அர்ப்பணித்தவர் இளையபெருமாள். நானும், இளையபெருமாளும் ஒரு தேர்தலில் சமூகநீதி கூட்டணி வைத்து போட்டியிட்டோம். ஆனால் இத்தொகுயில் போட்டியிட்ட அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது கருணாநிதி தலைமையில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இணைந்த சமுதாயக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வெற்றி பெறும்.
உழைக்கும் சமுதாயமான இரு சமுதாயத்தினரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என திருமாவளவனும், நானும் கூடி பேசி ஓரணியில் சேர்ந்தோம். அதற்கு பாலமாக இருந்தவர் துரை.ரவிக்குமார். இனி இரு சமுதாயத்தினரிடையே சண்டை வராது. இத்தொகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தை துரை.ரவிக்குமாருடன் சேர்ந்து நானும் முதல்வரிடம் தெரிவித்து முதல் பட்ஜெட்டிலேயே தனி தாலுக்காவாக மாற்ற முயற்சி செய்வோம்.
மேலும் சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும். எனவே துரை.ரவிக்குமாரை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார்.
வேட்பாளர் துரை.ரவிக்குமார் பேசியது:
கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் நீண்டகால கோரிக்கையான முட்டம்-மணல்மேடு பாலம் அமைக்கவும், வீராணம் ஏரி தூர்வாரவும், வெள்ளத்தடுப்புக்கு பலநூறு கோடிக்கு திட்டப்பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என்றார்.
கூட்டத்தில், பா.ம.க. சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, மாநில துணைத்தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், முன்னாள் பாமக மாவட்டச் செயலர் உ.கண்ணன், திமுக ஒன்றியச் செயலர் முத்துசாமி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக