உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஏப்ரல் 20, 2011

மின் வெட்டு காரணமாக கடலூரில் அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை

குடிநீரில், சாக்கடை கலந்து வருவதாக புகார் தெரிவித்து, தண்ணீரை பாட்டிலில் பிடித்துக் காண்பிக்கும் கடலூர் சுப்புராயலு நகர் பகுதி பெண்.
கடலூர்:
          மின் வெட்டு காரணமாக கடலூர் நகரில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது.
             கடலூர் நகருக்கு பெண்ணை ஆற்றிலும், கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை பகுதி மற்றும் திருவந்திபுரம் பகுதிகளிலும் 15-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.கடலோரப் பகுதியாக இருப்பதால் கடல் நீர் உள்புகுதலின் காரணமாக, கடலூரில் நிலத்தடி நீர் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. பெண்ணை ஆற்றில் இருந்து விநியோகிக்கும் நீர் சுவை குன்றியதன் காரணமாகவே, கேப்பர் மலையில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.16 கோடியில் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. 
             திட்டத்தை விரிவுபடுத்த மேலும் பல கோடி செலவிடப்பட்டு உள்ளது.எனினும் கேப்பர் மலை ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் குடிநீர் சுவை, 2 ஆண்டுகளில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். கடலூரை அடுத்துள்ள சிப்காட் தொழிற்சாலைகள் நாளொன்றுக்கு 4 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உருஞ்சுவதாலும் நிலத்தடி நீரில், கடல் நீர் கலப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் நிரந்தரமாகிப் போய்விட்ட மின் வெட்டு, கடலூர் நகர குடிநீர் விநியோகத்தைப் பெரிதும் பாதிக்கிறது. 
             பகலில் 3 மணி நேரம் மின் வெட்டு நிரந்தரம். இதுதவிர பகலிலும் இரவிலும் மின்வாரியம் நினைக்கும் நேரத்தில் எல்லாம் மின்சாரத்தை நிறுத்தி விடுவது, மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. இதுகுறித்து எந்த அதிகாரிகளும், எந்த அரசியல் தலைவர்களும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை என்பதே கடலூர் மக்களின் ஆதங்கம்.கடலூர் நகரில் நிலத்தடி நீர் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விட்டதால், பெரும்பாலான மக்கள் அனைத்து தண்ணீர் தேவைகளுக்கும் நகராட்சி குடிநீரையே நம்பி இருக்கிறார்கள். கோடைக்காலம் வந்துவிட்ட நிலையில், தண்ணீர் தேவை அதிகரிப்பது இயல்பானது.
            இந்நிலையில் அதிகரித்து வரும் மின் வெட்டு, ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து குடிநீர் இறைப்பதை பெரிதும் பாதித்து உள்ளது. 30 நிமிஷம் மின் வெட்டு ஏற்பட்டாலும் மீண்டும் அனைத்து மோட்டார்களையும் இயக்க 2 மணி நேரத்துக்கு மேல் ஆவதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.இதனால் நகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளுக்கு, முழுமையாக நீரேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சுப்புராயலு நகர் பகுதியில் குடிநீர் நிறம் மாறியிருக்கிறது. இங்கு குடிநீரில் சாக்கடை கலப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். அண்ணா நகர், துரைசாமி நகர், சாமிப்பிள்ளை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 30 நிமிஷம்கூட தண்ணீர் கிடைப்பது இல்லை என்கிறார்கள் பொதுமக்கள்.
               இதன் காரணமாக கடலூர் நகர மக்கள் டிராக்டர், லாரி டேங்கர்களில் வரும் நீரை, குடத்துக்கு ரூ.3 விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. டேங்கர்களில் வரும் குடிநீர் சுவையாக இருப்பதாகக் கூறினாலும், அதில் கால்சியம் கார்பனேட் அதிக அளவில் கலந்து இருப்பதால், சிறுநீரகத்தில் கல் உற்பத்தியாதல் போன்ற வியாதிகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதை, பலரும் அறிந்து இருக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குடிநீர் பிரச்னை குறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியது 
      கோடைக்காலத்தில் நகரில் தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது. ஆனால் மின்வெட்டு குடிநீர் விநியோகத்தை பெரிதும் பாதிக்கிறது. மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் முழுமையாக நிரம்புவதில்லை. 30 நிமிஷம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மீண்டும் அனைத்து மோட்டார்களையும் இயக்க 2 மணி நேரம் ஆகும். குடிநீரில் சாக்கடை கலப்பதாக வந்த புகார் சரி செய்யப்பட்டு உள்ளது.ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து குடிநீர் பெறுவதில் பிரச்னை ஏற்படும்போது, மாற்று திட்டங்களை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior