உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 21, 2011

கடலூர் மாவட்டத்தில் முந்திரி மரங்களில் தேயிலை கொசு தாக்குதல்

கடலூர்: 
              கடலூர் மாவட்டத்தில் முந்திரி மரங்கள் தேயிலை கொசு என்ற பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் ஏற்பட்டுள்ள மகசூல் பாதிப்பு விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.  தமிழகத்தில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் முந்திரி மரங்கள் அதிகளவில் உள்ளன. அதிலும் கடலூர் மாவட்டத்தில் தான் அதிகம். கடலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் முந்திரி பயிரிடப்பட்டுள்ளன. 
              பண்ருட்டி வட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கரில் முந்திரி மரங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக முந்திரிக் கொட்டைகள் கடலூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.  இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முந்திரிக் கொட்டை சீசன் தொடங்கி இருக்கிறது. ஆனால் விவசாயிகளை பெரிதும் ஏமாற்றும் விதத்தில் மகசூல் அமைந்துள்ளது. டிசம்பரில் பெய்த வடகிழக்குப் பருவ மழை காரணமாக, ஈரப்பதம் நீடித்ததால் முந்திரி மரங்கள் பூப்பதில், ஒரு மாதம் காலதாமதம் ஏற்பட்டது.  
             கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில் வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால், முந்திரி மரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கடும் வெயில் காரணமாக முந்திரிப் பூக்கள் பெருமளவு கருகியுள்ளன. மேலும் தேயிலை கொசு என்ற பூச்சித் தாக்குதலும், இந்த ஆண்டு அதிக அளவில் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

பூச்சிக் கொல்லி மருந்துகள்: 

              பூச்சித் தாக்குதலில் இருந்து முந்திரி மகசூலை காப்பாற்ற என்டோசல்ஃபான், ரோகர் போன்ற மருந்துகளை, 15 நாளுக்கு ஒருமுறை அடிக்க வேண்டும் என்று, வேளாண் துறை பரிந்துரை செய்துள்ளது. 


             அதன்படி விவசாயிகள் இந்த பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்துள்ளனர். எனினும் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். 
 இதுகுறித்து பெத்தாங்குப்பம் விவசாயி பழனிச்சாமி கூறுகையில், 
              3 ஏக்கரில் முந்திரி பயிரிட்டுள்ளேன். கடந்த ஆண்டு ஏக்கருக்கு 5 மூட்டை (400 கிலோ) முந்திரிக் கொட்டைகள் கிடைத்தன. இந்த ஆண்டு உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் என ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்துவிட்டேன். ரூ. 9 ஆயிரம் செலவு செய்து 3 முறை மருந்து அடித்து விட்டேன். தேயிலை கொசு என்ற பூச்சியும் கட்டுப்படவில்லை. வெயிலின் கடுமையும் அதிகமாக உள்ளது.  இதுவரை மொத்தம் ஒரு மூட்டை முந்திரிக் கொட்டைதான் கிடைத்து இருக்கிறது. தற்போது முந்திரிக் கொட்டை மூட்டைக்கு ரூ. 7,500 வரை விலை கிடைக்கிறது.  ஆனால் முந்திரிக் கொட்டை விளைச்சல் பாதிப்பு, விவசாயிகளை கண்கலங்கச் செய்துள்ளது. ஒரு வாரத்துக்குள் கோடை மழை பெய்தால், பூச்சித் தாக்குதல் சரியாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். 
 வேளாண் அதிகாரி விளக்கம்: 
இதுகுறித்து வேளாண் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராமலிங்கம் கூறியது
              இந்த ஆண்டு டிசம்பர் மழை காரணமாக முந்திரி மரங்கள் பூப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதன் காரணமாக, காலம் தாழ்ந்து உற்பத்தியான பூக்கள், கருகத் தொடங்கி விட்டன. தேயிலை கொசு தாக்குதலும் காணப்படுகின்றன. வேளாண் துறை பரிந்துரையின் பேரில் இதற்கான பூச்சிக் கொல்லி மருந்துகளை, 90 சதவீதம் விவசாயிகள் தெளித்து இருக்கிறார்கள்.  எனினும் பூச்சித் தாக்குதல் கட்டுக்குள் வரவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். தற்போது கோடை மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுகிறது. 
          ஒரு மழை பெய்தால் போதும் நிலைமை சீராகும். புதிய பூக்கள் உற்பத்தியாகி, மகசூலை வழக்கம்போல் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழைதான் விவசாயிகளுக்குக் கைகொடுக்க வேண்டும் என்றார்.   

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior