உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

திருவள்ளுவர் பல்கலை. வினாத் தாள் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்

              திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் திங்கள்கிழமை நடைபெற வேண்டிய தேர்வுக்கான வினாத் தாள் மாறியதை அடுத்து அத்தேர்வு மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
               பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 96 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 6 தன்னாட்சி கல்லூரிகளும் அடங்கும். மீதமுள்ள 90 கல்லூரிகளுக்கு திருவள்ளுவர் பல்கலைக் கழகம் தேர்வுக்கான வினாத் தாள் தயாரித்து அனுப்புகிறது.பிபிஏ பாடப் பிரிவு உள்ள கல்லூரிகளில் 4-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிபிஏ தேர்வு எழுதுவதாகத் தெரிகிறது.
 
             இவர்களுக்கு திங்கள்கிழமை உற்பத்தி மற்றும் தளவாடங்கள் மேலாண்மை (PRODUCTION AND MATERIAL MANAGEMENT) பாடத்துக்கான தேர்வு நடைபெறவிருந்தது.வினாத்தாள் அந்தந்த கல்லூரிகளில் காலை 9.45 மணியளவில் பிரிக்கப்பட்டு 10 மணியளவில் தேர்வு எழுதக் காத்திருந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. குறிப்பிட்ட பாடத்துக்கான குறியீட்டு எண்.எஸ்பிஏ 41 இடம்பெற்ற வினாத் தாள்களில், இடம்பெற்றிருந்த வினாக்கள் அனைத்தும் நிதி மேலாண்மை (FINANCIAL MANAGEMENT) பாடத்துக்கு உரியவையாக இருந்தன.
 
              இதனால் தேர்வு எழுதவிருந்த மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இது தொடர்பாக அந்தந்தக் கல்லூரி நிர்வாகத்தினர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தை தொடர்பு கொண்டபோது, திங்கள்கிழமை நடைபெறவிருந்த தேர்வை ரத்து செய்வதாகவும், வேறொரு தேதிக்கு இத்தேர்வை நடத்துமாறும் பல்கலைக் கழக நிர்வாகத்தினர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. திங்கள்கிழமை தவறுதலாக வெளியான நிதி மேலாண்மை பாடத்துக்கான வினாத்தாள்கள் 5-வது செமஸ்டர் எழுதவுள்ள மாணவர்களுக்குரியது. 
 
               இத்தேர்வு ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் அத்தேர்வையும் பல்கலைக் கழகம் ரத்து செய்து மற்றொரு தேதியில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் கூறுகின்றனர். தொடர்பு எல்லைக்கு வெளியே இதுதொடர்பாக அறிய பல்கலைக் கழக துணை வேந்தர், பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோரை தொலைபேசி, அலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும், அவர்களை இரவு வரை தொடர்புகொள்ள இயலவில்லை. 
 
             வினாத்தாள் மாறியதற்கு பல்கலைக் கழக நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக் கழக கல்விக்குழு உறுப்பினரும், பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் மண்டலம் 3-ன் செயலருமான எஸ். குமார் கூறினார். வினாத் தாள் தயாரிக்கப்பட்டதும், அதற்கான குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை வெளி பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் அடங்கிய பரிசீலனைக் குழுவின் ஆய்வுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் வினாத்தாளில் இடம்பெற்றுள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா என பல்கலைக் கழக அலுவலர்கள் அடங்கிய வினாத்தாளை பாதுகாக்கும் ரகசியப் பிரிவினர் கவனித்திருக்க வேண்டும்.
 
                பல்கலைக் கழகம் பிபிஏ மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த தேர்வு மற்றும் வினாத்தாள் வெளியான 5-வது செமஸ்டர் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வையும் வேறொரு தேதியில் நடத்துவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என குமார் கேட்டுக் கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior