கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் சீட்டுகளை விநியோகிக்க, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வாக்காளர் சீட்டுகளை வழங்கினர்.
ஒரு வாக்குச் சாவடிக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ள, வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள், இந்த வாக்காளர் சீட்டுகளை வீடுவீடாகச் சென்று வழங்கி வருகிறார்கள். வாக்காளர் சீட்டுகள் முறையாக வழங்கப்பட்டு உள்ளனவா என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், திங்கள்கிழமை கங்கனாங்குப்பம், உச்சிமேடு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியது:
சிதம்பரம் தொகுதியைத் தவிர மற்ற 8 தொகுதிகளிலும் வாக்காளர் சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இப்பணி முடிவடையும். மாவட்டம் முழுவதும் 16லட்சத்து 76 ஆயிரத்து 117 வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்கும் பணி 2 நாள்களில் முடிவடையும். சிதம்பரம் தொகுதிக்கு மட்டும் வாக்காளர் சீட்டு 5,6 தேதிகளில் வழங்கப்படும். வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் தாலுகா அலுவலகங்களைத் தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம். வாக்குப் பதிவின்போது வாக்காளர் சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம்.
9,458 தேர்தல் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், பிரதிநிதிகள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு சின்னம் பதிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்களை நியமிக்க விரைவில் ஆணை வழங்கப்படும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, முதன் முறையாக தேர்தல் பணி புரியும் போலீஸ் காவலர்களும் கணினி மென்பொருள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வாக்குச் சாவடிகளில் லேப்டாப் வெப் காமிரா போன்றவற்றை பயன்படுத்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. 9 தொகுதிகளிலும் தபால் ஓட்டு வழங்கும் பணி செவ்வாய்க்கிழமைக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளைக் கடைபிடிக்க இரவு நேரங்களில் பறக்கும் படைகளின் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பறக்கும் படைகளில் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு இருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீக்கப்பட்டு, அந்த இடங்களில் துணை வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றார் ஆட்சியர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக