உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, ஏப்ரல் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் மது வகைகள் தட்டுப்பாடு


போதிய சரக்கு இல்லாததால், வெறிச்சோடி காணப்படும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே உள்ள, இரு டாஸ்மாக் மதுக் கடைகள்.
 
கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் பீர் உள்ளிட்ட மதுவகைகளுக்கு, பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.  

              கடலூர் மாவட்டத்தில் 226 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் நாளொன்றுக்கு சுமார் ரூ.1.5 கோடி அளவுக்கு, மது விற்பனை ஆகின்றன. 3 மாதங்களாக டாஸ்மாக் மதுக் கடைகளில் பீர் உள்ளிட்ட மதுவகைகள் பெருமளவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக மதுப் பிரியர்கள் கூறுகிறார்கள்.  

               டாஸ்மாக் மதுக்கடைகளில் மேற்பார்வையாளர்கள், வாரம் இரு முறை கடைகளுக்குத் தேவையான மதுபாட்டில்கள் எவ்வளவு என்று, மாவட்ட அலுவலகத்துக்கு கொள்முதல் குறிப்பு அனுப்புவார்களாம். மறுநாளே அவர்கள் கேட்டபடி மது பாட்டில்கள் வந்து இறங்கி விடுமாம்.  தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதை தொடர்ந்து, மதுக்கடைகளுக்கு போதிய சரக்குகள் கேட்டபடி வழங்கப்படுவது இல்லையாம். 

                 கடலூர் தாலுகாவில் கடந்த வாரத்தை ஒப்பிடும் போது, இந்த வாரத்தில் சரக்கு விநியோகம் சற்று பரவாயில்லை என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனாலும் விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாக்களில் ஒரு வாரமாக மது வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக மதுப் பிரியர்கள் தெரிவிக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் குறிப்பாக பீர் வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு இருப்பதாக் கூறப்படுகிறது. 3 மாதங்களுக்கு முன்பு வரை டாஸ்மாக் கடைகளில் கிங்பிஷர், மார்கோபோலோ, புல்லட், பிளாக் அண்ட் ஒயிட், 5000 ஆகிய பீர் வகைகள் தாராளமாகக் கிடைத்து வந்ததாம். ஆனால் 3 மாதங்களாக கிங்பிஷர் பிராண்ட் பீர் மட்டுமே கிடைக்கிறதாம்.  

                 மாவட்டம் முழுவதும் பார்த்தால் மொத்த தேவையில், 50 சதவீதம் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு பீர் உள்ளிட்ட மதுவகைகள் வழங்கப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். மதுத் தட்டுப்பாடு, கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தாலுகாக்களைச் சேர்ந்த மதுப்பிரியர்களை, பெருமளவில் பாதிக்கவில்லையாம். தமிழகப் பகுதியில் மது கிடைக்காவிட்டாலும், எளிதில் புதுவை மாநிலம் சென்று குடித்து விட்டு வந்து விடுகிறார்களாம். அங்கு நிறைய உயர் ரக மதுவகைகள் கிடைப்பதுடன், விலையும் தமிழகத்தைவிடக் குறைவாக இருக்கிறதாகக் கூறுகிறார்கள்.  

               பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களுக்குச் சென்று மது அருந்த முடிகிறதாம். மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது என்று மதுப்பிரியர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் விளைவாக பலர் கள்ளச்சாராயத்துக்கு திரும்பும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

இது குறித்து டாஸ்மாக் பொது மேலாளர் சுந்தரேசன் கூறியது :

            டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை எப்போதும் போல் உள்ளது. கடைகளுக்குத் தேவையான அளவுக்கு மதுவகைகள் வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையக் கட்டுப்பாடுகள் காரணமாக, குறைந்த நாள்கள் பிரச்னை இருந்தது. எனினும் தற்போது நாளொன்றுக்கு சராசரி ரூ. 1.5 கோடி வரை, மது விற்பனை ஆகிறது. பீர் தட்டுப்பாடும் இல்லை. கோடை காலமாக இருப்பதால் பீர் தேவை அதிகரித்து இருக்கிறது என்றார்.  

இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சிலர் கருத்துக் கூறுகையில், 

                   தேர்தல் அறிவிப்புக்குப் பின், தமிழகத்துக்குத் தேவையான மதுவகைகள், மது தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து முழுமையாகக் கிடைக்கவில்லை என்று உயர் மட்ட அதிகாரிகள் கூறுகிறார்கள். பீர் வகைகள் வழங்குவதை பல நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் மது விற்பனை நிறுவனங்களுக்கும் இடையே, ஏதோ பிரச்னை எழுந்து இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.   

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior