உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 07, 2011

கடலூரில் அட்சய திருதியை: ரூ. 20 கோடிக்கு நகை விற்பனை

கடலூர்:

                  அட்சய திருதியை முன்னிட்டு கடலூர் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடலூரில் மட்டும் ரூ. 20 கோடிக்கு நகைகள் விற்பனை ஆகியிருப்பதாக வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீடுகளில் செல்வம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த நம்பிக்கை மக்களிடையே பெருகி வருகிறு.
 
           அட்சய திருதியை நேரம் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி வரை என்று கணித்து ஜோதிடர்கள் அறிவித்து இருந்தனர்.  இந்த நேரத்தில் கடலூர் நகைக் கடைகளில் நகை வணிகம் மிக அதிகமாக இருந்தது. கடலூரில் 200க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளன. கடலூரைச் சுற்றியுள்ள புதுவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை விட, கடலூரில் பொதுவாக நகை வணிகம் அதிகம். புதுவை பிரதான வணிக கேந்திரமாக விளங்கியபோதிலும் பொதுவான நாள்களில் நகை வணிகம், புதுவையை விட கடலூரில் அதிகம் என்கிறார்கள் கடலூர் நகை வணிகர்கள். கடலூர் நகைகளுக்கு மக்களிடையே பாரம்பரியமாக நம்பிக்கை இருந்து வருவதுதான் இதற்குக் காரணம்.
 
            கடலூரில் சாதாரணமாக முகூர்த்த நாள்களையொட்டி, ரூ. 10 கோடி வரை நகை வியாபாரம் இருப்பதாக, நகை வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். அட்சய திருதியையொட்டி கடலூரில் ரூ. 20 கோடிக்கு மேல் நகை வணிகம் நடந்து இருப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத நகை வணிகர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 
 
 
நகை வணிகர்கள் சங்க நிர்வாகி ஒருவர்கூறுகையில், 

            ஏனைய பண முதலீடுகளில் நிறைய சந்தை அபாயங்கள் உள்ளன. தங்கத்தின் விலை பெரும்பாலும் ஏறுமுகமாகவே உள்ளது. தங்கத்தை வைத்து உடனே பணமாக்க முடியும். எனவே முதலீட்டுக்கு ஏற்றதாகவும் இருப்பதால், தங்கத்தை வாங்குவோர் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே உள்ளது. ÷அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சற்று குறைந்து இருப்பதும், மக்களை நகை வாங்கத் தூண்டியிருக்கிறது. அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க வரும் பெண்கள், பெரும்பாலும் வயதான பெண்மணிகளாக இருந்தாலும், புதிய டிசைன் என்ன வந்து இருக்கிறது என்றுதான் கேட்கிறார்கள் என்றார்.
 
இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

             தங்கத்துக்கு 1 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பல நகை வியாபாரிகள் வரி செலுத்துவது இல்லை. பலர் வரிவிதிப்பு எண்கூட வாங்குவது இல்லை. பொதுவாக முகூர்த்த நாள்களில் ரூ.10 கோடி வரை நகை வணிகம் நடைபெறும். கடலூரில் மாதம் ரூ.4 லட்சம் மட்டுமே (ரூ. 4 கோடிக்கு நகை வணிகம்) வரி செலுத்தப்படுகிறது. புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நகைக் கடை ஒன்று, மாதம் ரூ. 1 லட்சம் வரி செலுத்துகிறது. ஆனால் மற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய நகைக் கடைகள், அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் வரைதான் வணிக வரி செலுத்துகின்றன.
 
              உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள ஒரு வழக்கு காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக நகை வணிகர்களிடம் இருந்து வரி வசூலிக்க முடியவில்லை. அட்சய திருதியை முன்னிட்டு முகூர்த்த நாள்களை விட, கடலூரில் இருமடங்கு நகை வணிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior