உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 21, 2011

சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் சிறப்பு பேட்டி

 புவனகிரி :

          அமைச்சர்கள் என்றாலே கார், பங்களா, பந்தா தான் நினைவுக்கு வரும். ஆனால் இதற்கெல்லாம் விதி விலக்கான அமைச்சர்கள் உள்ளனர். அந்த வரிசையில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயமும் ஒருவர். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவரை தோற்கடித்தார்.

             இந்த தேர்தலிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அறிவுச் செல்வனை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். ஏற்கனவே 10 ஆண்டுகள் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தாலும் மிகவும் எளிமையாக வலம் வருபவர். கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் குடும்ப உறுப்பினர் போல் தவறாமல் பங்கேற்று விடுவார். இதனால் கட்சி நிர்வாகிகள் செல்வி ராமஜெயம் மீது தனி பாசம் வைத்துள்ளார்.

           எந்த சூழ்நிலையிலும் எளிமையான வாழ்க்கையை விரும்புபவர். இன்றும் பரங்கிப் பேட்டை அகரத்தில் உள்ள ஓட்டு வீட்டில் தாயாருடன் வசித்து வருகிறார். மிக சாதாரணமாக இருக்கும் அந்த வீட்டை பார்த்தால் இதுவா அமைச்சரின் வீடு என்று ஆச்சரியமாக இருக்கும். இந்த வீட்டில் கடந்த 16 ஆண்டுகளாக செல்வி ராமஜெயம் வாழ்கிறார். செல்வி ராமஜெயத்தின் குடும்பம் மிகப்பெரியது. உடன் பிறந்தவர்கள் 6 சகோதரிகள் ஒரு சகோதரர். மூத்தவர் செல்விராமஜெயம். தந்தையின் வியாபாரத் தில்தான் குடும்பமே வாழ்ந்தது. முதல் பெண்ணான செல்வி ராமஜெயத்துக்கு திருமணம் முடிந்து 2 பெண், ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

             இந்த நிலையில் 1995-ம் ஆண்டு பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் பதவிக்கு ராமஜெயம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற 60 நாட்களில் தேர்தல் விரோத்திலும், முன்பகை காரணமாகவும் ராம ஜெயத்தை வெட்டி கொலை செய்து விட்டனர். அதன் பிறகு கணவர் விட்டு சென்ற அரசியல் பணியை செல்வி ராமஜெயம் தொடர்ந்தார். கணவருக்கு சொந்தமான மாடி வீடு உள்ளது. அங்கு வசிக்க செல்வி ராமஜெயத்துக்கு மனமில்லை. எளிமையாகவே வாழ்ந்து பழக்கப்பட்ட செல்வி ராமஜெயம் பூர்வீக ஓட்டு வீட்டில் பெற்றோருடன் வாழ தொடங்கினார்.

             கடந்த 16 ஆண்டுகளாக இந்த வீட்டிலேயே வாழ்கிறார். ராமஜெயம் இறந்த அதிர்ச்சியில் செல்வி ராமஜெயத்தின் தந்தையும் இறந்தார். இதனால் சகோதரிகளை கரை சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பும் செல்வி ராமஜெயம் மீது விழுந்தது. பல்வேறு கஷ்டங்களை தாங்கி 5 சகோதரிகளை திருமணம் செய்த கொடுத்து விட்டார். இன்னும் ஒரு சகோதரி சரண்யா திருமணம் ஆகாமல் உள்ளார். சகோதரருக்கும் திருமணம் ஆகவில்லை. 
பல சோக சுமைகளை சுமந்து விட்ட செல்வி ராமஜெயம் கூறியது:-

                ஒரு பெண்ணாக இருந்து என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமோ அத்தனையும் அனுபவித்து விட்டேன். நான் அனுபவிக்காத கஷ்டமில்லை. எதையும் தாங்கும் பக்குவத்தை வளர்த்து கொண்டேன். அரசியலிலும் சரி, குடும்பத்திலும் சரி எந்த பக்கபலமும் இல்லாமல் வளர்ந்து வந்துள்ளேன். இது எப்படி என்று என்னால் நம்பவே முடியவில்லை. இதற்கு காரணம் கடவுளின் அருளும் கடவுள் வடிவில் அம்மா காட்டிய கருணையும் தான். இதுவரை என்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வந்தேன். இனி அம்மா வழங்கிய அமைச்சர் என்ற அங்கீகாரத்தோடு தமிழக மக்களுக்கு தொண்டு செய்வேன்.  இவ்வாறு அவர் கூறினார். செல்வி ராமஜெயத்தின் 2 மகள்களில் ஒரு மகளுக்கு திருமணமாகி இவருக்கு பேரக் குழந்தையும் உள்ளது. ஒரு மகளுக்கும் மகனுக்கும் திருமணமாகவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior