உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 21, 2011

குப்பைமேடாகி வரும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம்

கடலூர்:

         கடலூர் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததன் காரணமாக தொன்மை வாய்ந்த கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் தொடர்ந்து அசுத்தமாகி வருகிறது. 

           கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், புல்வெளிகள் நிறைந்த கோல்ஃப் மைதானமாக இருந்ததாகவும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அதில் கோல்ஃப் விளையாடியதாகவும் சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று அதில் புல்வெளிகளும் இல்லை. கோல்ஃப் விளையாட்டும் இல்லை என்றாலும், நகரின் மையப் பகுதியில் அமைந்து இருப்பதால், நகரம் முழுமைக்கும் கடல் காற்றோட்டத்தை ஏற்படுத்தும் விதமாக, இந்த மைதானம் அமைந்து உள்ளது. 

            மாலை நேரங்களில் பலர் காற்று வாங்க இந்த மைதானத்தில் வந்து அமர்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த மைதானத்தின் ஓரங்களில் அழகிய தென்னை மரங்களும் அவற்றின் அருகே சிமென்ட் இருக்கைகளும் இருந்தன. ஆனால் அவைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் நகராட்சி நிர்வாகத்துக்கும், அதில் அங்கம் வகிக்கும் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் உருவாகாமல் போனது கடலூர் மக்களின் துரதிருஷ்டம் என்றுதான் கூறமுடியும். இந்த அழகான மைதானத்தை அழகுபடுத்தாவிட்டாலும், அழுக்குப்படுத்தாமல் சுத்தமாகவாவது வைத்திருக்க, நகராட்சி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் என்பதுதான் கடலூர் மக்களின் ஆசை.

             இந்த மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக மைதானத்தின் ஒரு பகுதியில் சுமார் 80 கழிவறைகளை நகராட்சி நிதியில் இருந்து கட்டி, அசுத்தத்தத்தின் உச்சத்துக்கே கொண்டு போய்விட்டது கடலூர் நகராட்சி. இன்று அக் கழிவறைகள் எல்லாம் பொதுக் கழிவறைகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் அவற்றை யாரும் பயன்படுத்தாமல், வெறும் நினைவுச் சின்னங்களாகக் காட்சி அளிக்கின்றன. அப் பகுதி முழுவதும் நகரின் குப்பகளைச் சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்தம் இடமாக மாற்றப்பட்டு துர்நாற்றத்தின் உறைவிடமாக மாறியிருக்கிறது. 

             மன்னன் வழியில் குடிமக்கள் என்பதுபோல், நகராட்சியே மைதானத்தை அசுத்தம் செய்யும்போது, நாமும் நமது பங்குக்கு அசுத்தப்படுத்துவோமே என்ற உயர்ந்த எண்ணத்தில், நகர மக்கள் பலரும், மஞ்சக்குப்பம் மைதானத்தில் குப்பைகளைக் கொட்டி வருகிறார்கள். இதையும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. அதுமட்டுன்றி குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இந்த மைதானத்தில், லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் நிறுத்துவோர், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். 

             அதைப் பற்றியோ ஏனைய அசுத்தங்களைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாத நகராட்சி நிர்வாகம், லாரிகளை நிறுத்தும் இடத்தில் ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கு வசதியாக, அவர்களின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் வகையில் அழகான சிமென்ட சிலாப்கள் பதித்து, நடைபாதையை ஏற்படுத்தி இருப்பதுதான் எதற்காக என்று தெரியவில்லை. தொன்மை வாய்ந்த மஞ்சக்குப்பம் மைதானத்தை, அழகுடனும் தூய்மை கெடாமலும், முறையாகப் பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior