உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 18, 2011

கடலூரில் 6 ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாத சாலைப் பணிகள்

கடலூர்:

           அரசுத் துறைகளின் மெத்தனப் போக்கால் கடலூரில் 2 சாலைப் பணிகள் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாமல் இருப்பதே நகரின் போக்குவரத்து நெரிசலுக்குப் பிரதான காரணமாக இருக்கிறது. 

          மாவட்டத் தலைநகரான கடலூரில், பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆக்கிரமிப்புகள், 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக பேசப்பட்டு வருகின்றன. ஆனாலும் இதற்கெல்லாம் மேலாக, மூலகாரணமாக இருப்பது பணி தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப் படாமல் இருக்கும் 2 இணைப்புச் சாலைப் பணிகள்தான்.  ஜவான்ஸ் பவனையும் கம்மியம்பேட்டையும் இணைக்கும் வகையிலும், கெடிலம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் நோக்கிலும் 2005-ம் ஆண்டு, சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு புதிய சாலை ரூ. 80 லட்சத்தில் அமைக்கப்பட்டது. 

             2007-ம் ஆண்டு இச்சாலையின் கரையோரம் கெடிலம் ஆற்றின் கரையைப் பலப்படுத்தும் வகையில் ரூ. 5 கோடியில் கான்கிரீட் கரை அமைக்கப்பட்டது.  ஆனால் 2005-ல் ரூ. 80 லட்சத்தில் உருவாக்கப்பட்ட சாலைக்கு இதுவரை தார்த்தளம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர்களாக இந்த 3 பேரிடம் பொதுமக்கள் முறையிட்டும், தார்த்தளம் அமைக்க முடியாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை. இச்சாலை எங்களின் பராமரிப்பில் இல்லை என்று பொதுப்பணித் துறை, நெஞ்சாலைத் துறை, கடலூர் நகராட்சி ஆகியன கைகழுவி விட்டன. 

                பின்னர் எத்துறையின் பராமரிப்பில் உள்ளது என்பதுதான் பொதுநல அமைப்புகள் தொடர்ந்து எழுப்பிவரும் கேள்வி. சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, முந்தைய ஆட்சியர் இதுகுறித்துப் பேசுகையில், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு திட்டத்தில் இச்சாலைக்கு தார்த்தளம் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.  புதிய மாவட்ட ஆட்சியராவது இச்சாலைக்கு தார்த்தளம் அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  அடுத்து 2004-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட திருப்பாப்புலியூர் ரயில்வே மேம்பாலத்துக்கு மேற்கு இணைப்புச் சாலையாக, வண்டிப்பாளையம் சாலையையும் சரவணன் நகரையும் இணைக்கும் வகையில், 300 மீட்டர் நீளம் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்று ரயில்வே மேம்பால திட்டத்திலேயே உள்ளது. 

              ஆனால் தனிப்பட்ட 4 நபர்களுக்குச் சாதகமாக கடலூர் நகராட்சி நிர்வாகம் நடந்து கொண்டு வருவதால், இந்த இணைப்புச் சாலை திட்டமும், மேம்பாலப் பணி முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.  நில ஆர்ஜிதத்துக்கு வருவாய்த் துறை ஒப்புதல் அளித்து நிலத்தின் விலையையும் நிர்ணயித்துக் கொடுத்து ஓராண்டு ஆகிவிட்டது. நகராட்சிகளின் ஆணையரும் ஒப்புதல் வழங்கி விட்டார். 

                 ஆனால் கடலூர் நகராட்சி நிர்வாகம் சில தனி நபர்களுக்கு ஆதரவாக இத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.  இந்த இரு இணைப்புச் சாலைகளும் நிறைவேற்றப்பட்டு இருந்தால், நகரில் போக்குவரத்து நெரிசல் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலை உருவாகி இருக்காது என்கிறார், கடலூர் நகர குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன். 

                இந்த இரு சாலைகளையும் அமைக்க ஏற்கெனவே 3 ஆட்சியர்களிடம் முறையிட்டு விட்டோம். கிடப்பில் போடப்பட்டுள்ள இச்சாலைப் பணிகளை முடித்தாலே போதும், கடலூர் நகரின் போக்குவரத்து நெரிசல் 50 சதவீதம் குறைந்து விடும். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நினைத்தால் 15 நாள்களில் முடிக்க முடியும் என்றார் மருதவாணன்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior