உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 02, 2011

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பால பணி மீண்டும் துவங்கியது

கடலூர் முதுநகர் : 


        கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பால பணி ஒன்பது மாதத்திற்குப் பிறகு மீண்டும் துவங்கியது.
            கடலூர் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் அருகே சிதம்பரம் ரயில் பாதை அமைந்துள்ளது. தற்போது இந்த ரயில்பாதை அகலப்பாதையாக மாற்றியதை தொடர்ந்து கூடுதல் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனால் அடிக்கடி பச்சையாங்குப்பம் ரயில்வே கேட் மூட வேண்டியுள்ளதால், சாலை போக்குவரத்து பாதிக்கும்.

             இதனை தவிர்க்கும் பொருட்டு பச்சையாங்குப்பத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்காக அரசு 8.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. சென்னையைச் சேர்ந்த பாரத் இன்ஜினியரிங் கம்பெனி டெண்டர் எடுத்தது. இப்பணியை 2011 மே மாதம் 20ம் தேதிக்குள் (கடந்த 20ம் தேதி) முடித்து தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடந்த 20.11.2009 அன்று மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்கியது.

           பணியை விரைந்து முடிக்கும் பொருட்டு கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கனரக வாகனங்கள் பூண்டியாங்குப்பம், குள்ளஞ்சாவடி வழியாகவும், இலகுரக வாகனங்கள் காரைக்காடு வழியாக விருத்தாசலம் சாலைக்கு திருப்பி விடப்பட்டன.  இந்நிலையில் பணி துவங்கிய சில மாதங்களிலேயே திடீரென கடந்த செப்டம்பர் மாதம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த மேம்பாலத்தை திறந்த நிலையில் பவுன்டேஷன் போட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், மண்ணின் தன்மை சரியில்லாத காரணத்தால் ஃபைல் பவுன்டேஷன் போட திட்டப்பணி மாற்றப்பட்டது. அதற்காக நெடுஞ்சாலைத்துறை கூடுதலாக 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

         அதனைத் தொடர்ந்து மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. இதற்காக மீண்டும், சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் ஆலப்பாக்கம், குள்ளஞ்சாவடி வழியாகவும், டவுன் பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் காரைக்காடு வழியாக விருத்தாசலம் சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால், இதனை எவரும் பின்பற்றாமல் அனைத்து கனரக வாகனங்களும் காரைக்காடு வழியாகவே சென்று வருகின்றன. குறுகிய சாலை வழியே அனைத்து கனரக வாகனங்களும் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

              ரயில்வே மேம்பால பணி தற்போதுதான் துவங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிவடைய பல மாதங்கள் ஆகும் நிலை உள்ளது. அதுவரை காரைக்காடு சாலையில் வாகனங்கள் அதிகளவில் செல்லக்கூடும். காரைக்காடு இணைப்புச் சாலையை வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக அகலப்படுத்த வேண்டும். அல்லது ஒரு வழிப்பாதையாக மாற்றி அதனை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior