உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 02, 2011

இலவச அரிசி திட்டம் கடலூர் மாவட்டத்தில் தொடங்கியது

கடலூர்:

               சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின், முக்கியத் திட்டமான 20 கிலோ இலவச அரிசித் திட்டம் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.  

                 தகுதியுள்ள ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி, இலவசமாக வழங்கப்படும் என்று, அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அவர் முதல்வராகப் பதவி ஏற்றதும், இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். கடலூர் மாவட்டத்தில் 1,360 ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கும் திட்டம், புதன்கிழமை தொடங்கப்பட்டது.  இதற்காக கடலூர் நகரில் எங்கும் டிஜிட்டல் பேனர் இல்லை. வரவேற்பு வளைவுகள் இல்லை. அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. க்கள் வருகைக்காக அதிகாரிகள் மணிக் கணக்கில் காத்திருக்கும் மரபுகள் இல்லை. 

                ரிப்பன் கட்டிங் மற்றும் அரிசியை அளந்து போடும் சம்பிரதாயங்கள் இல்லை. எம்.எல்.ஏ.க்களும் கட்சிக்காரர்களும் ரேஷன் கடைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அமைச்சர்களை வரவேற்று 50 பக்கம் 100 பக்கம், பத்திரிகை விளம்பரங்களும் இல்லை. இலவச அரிசி வழங்கும் திட்டம் இயல்பாக, மிகவும் எளிமையாகத் தொடங்கப்பட்டது. 1,360 ரேஷன் கடைகள் மூலம் இத்திட்டத்தில்  மாவட்டத்தில் உள்ள 6,38,525 குடும்ப அட்டை தாரர்களுக்கும் இலசவ அரிசி விநியோகம் தொடங்கியது. 

                 ரேஷன் கடைகளில் இத்திட்டம் கோலாகலமான விழாவுடன் தொடங்கப்படும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த காலங்களில் நடைபெற்ற  கோலாகலமான அரசு விழாக்களைப் போல், சென்னையில் முதல் அமைச்சரும், அந்தந்தப் பகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள் என்றும், செவ்வாய்க்கிழமை மாலை வரை எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகக் கடைகள்கூடத் தேர்வு செய்யப்பட்டன. கடலூர் பாதிரிக்குப்பத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

                  ஆனால் இலவச அரிசி வழங்கும் திட்டம், எளிமையாகத் தொடங்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவு, புதன்கிழமை காலையில்தான் தெரியவந்தது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதே ஆட்சியின்  நோக்கமாக இருக்க வேண்டும், அதற்கு எந்த விளம்பர வெளிச்சமும் போடத் தேயில்லை என்ற முதல்வரின் எண்ணம், பொதுமக்களுக்குப் புதுமையாகவும்  மனதைக் கவர்ந்ததாகவும் இருந்தது.  இந்த நிலை என்றும் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.  

                 கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோண்டூர், பாதிரிக்குப்பம் நியாயவிலைக் கடைகளில், இலவச அரிசி வழங்கப் படுவதை,  மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) சி. ராஜேந்திரன், பார்வையிட்டு அரிசியின் தரம், எடை அளவு குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.  

மாவட்ட வருவாய் அலுவலர் பின்னர் கூறுகையில்,

             கடலூர் மாவட்டத்தில் 1,123 முழு நேர நியாயவிலைக் கடைகள், 227 பகுதி நேர நியாயவிலைக் கடைகள், 10 மகளிர் நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி, மாதம் முழுவதும் வழங்கப்படும் என்றார்.  இந்த ஆய்வின்போது மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பொ. முத்தையா உடன் இருந்தார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior