
                         எப்போதும் கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம்  ஏரிக்கு, போதிய தண்ணீர் வராததால் தோட்டி வாய்க்காலில் மட்டும் நீர் நிரம்பி  இருக்கும் காட்சி.
கடலூர்:
           கடலூர் மாவட்ட டெல்டா பாசன விவசாயத்துக்கு போதுமான தண்ணீர்  கிடைக்கும் வகையில், கொள்ளிடம் கீழணைக்குக் கல்லணையில் இருந்து கூடுதலாக  காவிரி நீர் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
                       கொள்ளிடம்  கீழணையில் இருந்து கடலூர் மாவட்ட டெல்டா நிலங்கள் 1.5 லட்சம்  ஏக்கருக்கும், நாகை மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கருக்கும், தஞ்சை  மாவட்டத்தில் 1,500 ஏக்கருக்கும் காவிரி நீர் வழங்கப்பட்டு வருகிறது. கல்லணைக்குக்  கிடைக்கும் காவிரி நீரில் 10 சதவீதம், பாரம்பரியமாகக் கொள்ளிடம் கீழணைக்கு  திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கொள்ளிடம் கீழணைக்கு கல்லணையில் இருந்து  விநாடிக்கு 1,002 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் இந்த நீர்  கொள்ளிடம் ஆற்றில் 67 மைல் தூரத்தைக் கடந்து, கீழணைக்கு வரும்போது 700  கனஅடிதான் கிடைக்கிறது.இதனால் 9 அடி உயரம் கொண்ட கீழணை நீர் மட்டம், கடந்த 5 நாள்களாக 3.5 அடியாகவே உள்ளது.
                இருப்பினும்  கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு, வடவாறு வாய்க்கால் வழியாக 296 கனஅடி  திறந்து விடப்பட்டு உள்ளது. வீராணம் ஏரி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக  தண்ணீர் பிடிக்கால் வறண்டு கிடந்தது. தற்போது பெறப்படும் நீர், கடுமையான  வெயிலில் ஆவியாதல், பூமிக்குள் கசிதல் காரணமாக, ஏரியின் நீர் மட்டமும்  குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயரவில்லை.ஏரிக்குள் கிழக்குக்  கரையோரமாக உள்ள தோட்டி வாய்க்காலில் மட்டுமே தற்போது தண்ணீர் உள்ளது.  இதனால் வீராணம் ஏரியில் இருந்து, பாசனத்துக்கோ, சென்னைக் குடிநீருக்குக்கோ  நீர் வழங்க முடியாத நிலை நீடித்து வருகிறது. 
             மேட்டூர் அணை வழக்கத்துக்கு  மாறாக முன்கூட்டியே திறக்கப்பட்டும், கடலூர் மாவட்ட டெல்டா பாசனப்  பகுதிகளில், குறுவை நெல் சாகுபடிக்கு இன்னமும் தண்ணீர் வந்து சேரவில்லை  என்பது, குறுவை விவசாயிகளின் கவலை. இந்நிலையில் நாகை, கடலூர் மாவட்ட  விவசாயிகளும், குறுவை சாகுபடிக்குக் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்க  வேண்டும் என்று கோரி வருகிறார்கள். கடலூர் மாவட்ட டெல்டா பாசனப்  பகுதிகளில் தற்போது, ஆழ்குழாய்க் கிணற்றுப் பாசன வசதி உள்ள விவசாயிகள்  மட்டுமே, குறுவை சாகுபடி செய்து உள்ளனர். 
                தற்போது 30 நாள் பயிராக உள்ளது.  20 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகக்  கடலூர் மாவட்ட வேளாண் துறை அறிவித்து உள்ளது. தொடர் மின் வெட்டால்,  ஆழ்குழாய் கிணற்றுப் பாசனம் குறுவை விவசாயிகளை பெரிதும் கவலைக் கொள்ளச்  செய்துள்ளது. கடந்த ஆண்டு டெல்டா பாசனப் பகுதிகளில் 1.42 லட்சம் ஏக்கரில்  சம்பா சாகுபடி செய்யப்பட்டது. குறித்த காலத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை  என்ற சங்கடம் கடந்த ஆண்டே இருந்தது.
                இந்த ஆண்டு மேட்டூர் அணை  முன்கூட்டியே திறக்கப்பட்டதால், சம்பா சாகுபடியை முன்னரே தொடங்கி,  வடகிழக்குப் பருவமழையின் தாக்குதலுக்கு முன்பே, பாதுகாப்புடன் அறுவடையை  முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில், டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
இது  குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன்  கூறுகையில், 
                 "நாகை மாவட்ட 22 ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்காக, கீழணைத்  திறப்பதனால், கடலூர் மாவட்டத்தின் 1.5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கா  வண்ணம், உரிய நேரத்தில் கீழணைக்குக் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். கல்லணையில்  இருந்து 10 சதவீதம் கீழணைக்கு என்ற பாரம்பரியத்தை விட்டுவிட்டு, 1.5  லட்சம் ஏக்கருக்கு தேவையான நீரைக் கணக்கிட்டு வழங்க வேண்டும்' என்றார்.
கொள்ளிடம்  கீழணை விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.கண்ணன் கூறுகையில், 
              "கல்லணையில்  திறந்து விடப்பட்டுள்ள நீரில், 700 கன அடிதான் கீழணைக்கு வந்து சேருகிறது.  வீராணம் ஏரியும் வறண்டு கிடக்கிறது.தோட்டி வாய்க்காலில் மட்டுமே  தண்ணீர் உள்ளது. கூடுதல் நீர் திறக்க வேண்டும். கடலூர் டெல்டா பகுதியில்  ஆழ்குழாய் கிணற்றுப் பாசனத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமான நிலங்களில்  செய்யப்படும் குறுவை சாகுபடிக்கு, காவிரி நீரை எப்படி பயன்படுத்த முடியும்  நீர் வீணாகி விடக் கூடாது என்ற கவலை விவசாயிகளுக்கு உள்ளது. வடக்குராஜன்  வாய்க்காலில் மராமத்துப் பணிகள் முடிவடையவில்லை. கொள்ளிடக் கரையை  பலப்படுத்தும் பணிக்கு, வீராணம் ஏரியில் மண் எடுப்பதும் தடைபடாமல் இருக்க  வேண்டும். எனவேதான் ஜூலை 15-ல் கீழணையைப் பாசனத்துக்குத் திறக்கலாம்  என்று தெரிவித்தோம். நாகை விவசாயிகளின் கோரிக்கை காரணமாக, முன்னரே  கீழணையைத் திறக்கிறார்கள் என கருதுகிறேன்' என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக