கடலூர் :
அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் பெரியார் அரசு கல்லூரி, சி.முட்லூர் தேவிகருமாரியம்மன் அரசு கல்லூரி மற்றும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கியது.
கடலூர்:
பெரியார் அரசு கல்லூரியில் முதல்வர் சத்தியமூர்த்தி முன்னிலையில் கலந்தாய்வு துவங்கியது. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் வேதியியல் பாடத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இன்று பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. பி.காம்., பிரிவில் உள்ள 120 இடங்களுக்கு 800 பேர் விண்ணப்பித்துள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் 500க்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம்:
கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கவுன்சிலிங் முதல் நாளான நேற்று சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், இலங்கை அகதிகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கான கவுன்சிலிங் நடந்தது. கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடந்த கலந்தாய்வில் 24 மாற்றுத் திறனாளிகள், 24 விளையாட்டு வீரர்கள், மூன்று இலங்கை அகதிகள் தேர்வு செய்யப்பட்டனர். வரும் 5ம் தேதி வரை நடக்கும் இந்த கலந்தாய்வில், இன்று (28ம் தேதி) ஆங்கிலம், 29ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், 30ம் தேதி இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடத்திற்கான கவுன்சிலிங் நடக்கிறது.
சி.முட்லூர்:
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் அரசு கல்லூரியில் நேற்றைய கலந்தாய்விற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு 850 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் 637 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு கல்லூரி முதல்வர் வாசுதேவன், துணை முதல்வர் தங்கமணி ஆகியோர் முன்னிலையில் கவுன்சிலிங் துவங்கியது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு பிளஸ் 2 தேர்வில் பிரதான நான்கு பாடங்களில் 593 முதல் 372 மதிப்பெண், இயற்பியல் பாடத்திற்கு 552 முதல் 314 மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடந்தது. அதில் 90 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இன்று (28ம் தேதி) கணிதம் மற்றும் பொது அறிவியல் பாடத்திற்கான கவுன்சிலிங் நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக