உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 08, 2011

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு இளநிலை பட்டப் படிப்புக்கு இணையானது: தமிழக அரசு உத்தரவு

         அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வரும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு, கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படும் இளநிலை பட்டப்படிக்கு இணையானது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

                இந்தப் பட்டப் படிப்பைக் கொண்டு அரசுப் பணிகளில் சேரும் போது, புதிய குழப்பம் உருவாகும் என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஒரு புதிய படிப்பைத் தொடங்க வேண்டுமென்றால் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவை. கலை மற்றும் அறிவியல் படிப்புகளை திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் கற்பிக்க வேண்டுமென்றால் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,), தொலைதூர கல்விக் கவுன்சில் ஆகியவற்றின் ஒப்பதல் பெற வேண்டும். தொழில் சார்ந்த படிப்புகள் எனில் யு.ஜி.சி., தொலைதூர கல்விக் கவுன்சில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.,) ஆகியவற்றின் ஒப்புதல் அவசியம்.  ஒரு குறிப்பிட்ட கல்லூரி அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகமானது, தான் கற்றுக் கொடுக்கும் படிப்பை, நடப்பில் உள்ள மற்றொரு படிப்புக்கு இணையாகக் கருதி உத்தரவிட வேண்டுமானால் அரசுக்கு அதுகுறித்து விண்ணப்பிக்க வேண்டும். 

             இந்த விண்ணப்பத்தை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆராய்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பும்.  

இணை கல்விக் குழு: 

              ஒரு படிப்பை மற்றொரு படிப்புக்கு இணையானதா என்பதை ஆய்வு செய்ய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணை கல்விக் குழு என்றொரு குழு உள்ளது. இந்தக் குழுவின் தலைவர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.  

ஐந்தாண்டு படிப்பு:

              இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்பட்டு ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பை, இளநிலைப் படிப்புக்கு இணையாகக் கருதக் கோரி அந்தப் பல்கலைக்கழகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்த அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணை கல்விக் குழு, பல்கலைக்கழகத்தின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பை இளநிலைப் படிப்புக்கு இணையாக அறிவித்துள்ளது.  இதையேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி, 

எம்.ஏ., (ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல், மக்கள் தொகை மற்றும் மேம்பாடு, தத்துவவியல், கலாசாரம் மற்றும் சுற்றுலா), நூலக அறிவியலில் பட்ட மேற்படிப்பு,

எம்.காம்., 

எம்.எஸ்ஸி (கணிதம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல், தாவரவியல், மூலிகை அறிவியல், விலங்கியல், உயிரி தகவலியல், நுண் உயிரியல், கடல்சார் அறிவியல்-தொழில்நுட்பம், 

எம்.ஏ., தமிழ் போன்ற படிப்புகள் பிற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அளிக்கும் இளநிலைப் படிப்புக்கு இணையானதாகக் கருதப்படும். 

              இந்தப் படிப்புகளைப் படித்துத் தேர்ச்சி அடையும் பட்டதாரிகள், அரசுப் பணிக்குத் தேர்வாகும் போது இளநிலைப் படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதப்படுவர்.  குழப்பம்: அரசின் உத்தரவில், பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொடுக்கப்படும் ஒருங்கிணைந்த படிப்பு எந்த வகையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்படவில்லை. தொலைதூர கல்வி மூலமாகவா அல்லது பல்கலைக்கழகத்தின் மூலமாகவா என்பது விளக்கப்படவில்லை. 

                மேலும், அனைத்துப் படிப்புகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு, தொலைதூர கல்விக் கவுன்சில் ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா எனவும் தெரிவிக்கப்படவில்லை.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள இணை கல்விக் குழுவில் மாற்றம் தேவை என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படுகிறது. 

             மூன்று நபர்கள் மட்டும் குழுவில் இருப்பதால் நடைமுறை சாத்தியமான முடிவுகளை அவர்கள் எடுப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள், யு.ஜி.சி.யில் உள்ளவர்கள் என பல்வேறு தரப்பினரையும் குழுவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior