உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 08, 2011

நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசனம்


சிதம்பரம் நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித்திருமஞ்சன தரிசன விழாவில் நடனப்பந்தலில் நடனமாடி வரும் நடராஜப்பெருமானை வழிபடும் திரளான மக்கள்.
சிதம்பரம்:

             சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.  ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர்.

               நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  புதன்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. புதன்கிழமை இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடை  பெற்றது. பின்னர் வியாழக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடம்குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது.  பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. 

              சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர்.  பின்னர் சித்சபை பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலர் சபா.கல்யாணசபாபதி தீட்சிதர், துணைச்செயலர் தி.தெய்வசிகாமணி தீட்சிதர், அறநிலையத் துறை செயல்அலுவலர் க.சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  கடலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பகலவன் நேரடி மேற்பார்வையில் சிதம்பரம் டி.எஸ்.பி. டிகே.நடராஜன் தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள், 13 இன்ஸ்பெக்டர்கள், 47 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  

அன்னதானம்: 

            கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கிழக்கு கோபுர வாயிலில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு, ஆடிட்டர் கே.நடராஜபிரபு தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பகலவன் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் மீனாட்சி, ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் சிவராமன், வி.சங்கர், கே.கணேசன், எஸ்.கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

              தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்றச் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமையில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோட்டாட்சியர் எம்.இந்துமதி அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  வட்டாட்சியர் ஜே.ராஜேந்திரன், தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலர் சி.டி.அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior