
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்குகிறார் என்எல்சி ன்எல்சி சுரங்கத்துறை இயக்குநர் பி. சுரேந்தர்
நெய்வேலி:
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சொ.பிரபாகரன் எழுதிய "கண்ணாமூச்சி பிரார்த்தனை' எனும் சிறுகதைக்கு முதல்பரிசு வழங்கப்பட்டது.
பரிசு பெற்றவர்களின் சிறுகதைகள் ஜூலை 10-ம் தேதி முதல் தினமணி கதிரில் பிரசுரமாகின்றன.14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் 9-ம் நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு என்எல்சி சுரங்கத்துறை இயக்குநர் பி. சுரேந்தர் மோகன் தலைமை வகித்து,தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
பரிசு பெற்றோர் விவரம்:
1-ம் பரிசு - சொ. பிரபாகரன், தூத்துக்குடி (கண்ணாமூச்சி பிரார்த்தனை).
2-ம் பரிசு - ரமேஷ்கல்யாண், ஓசூர் (போன்சாய் மனங்கள்).
3-ம் பரிசு - சோ. சுப்புராஜ், சென்னை (குங்குமச்சிமிழ்).
ஆறுதல் பரிசு பெற்றவர்கள்:
ராசி. அழகப்பன் - சென்னை,
யாணன் - சென்னை, உஷாதீபன் - மதுரை,
கி. ரவிக்குமார் - நெய்வேலி, மாரி - சென்னை.
பரிசு பெற்றவர்களின் கதைகள் தினமணி கதிரில் ஜூலை - 10 முதல் பிரசுரமாகும்.
சனிக்கிழமை நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் கே. பார்த்தசாரதி பேசுகையில்,
"குழந்தைகளிடையே தற்போது புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவருகிறது. எழுதிப் பழகும் திறனும் குறைந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் கணினிக்குச் சென்று விடுகின்றனர். குழந்தைகளிடையே தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் குறையவேண்டும். அப்போதுதான் அவர்கள் புத்தகங்களின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பி அறிவை விரிவடையச் செய்யமுடியும். என்எல்சி நிறுவனம், நெய்வேலி புத்தகக் கண்காட்சி எனும் சிறப்பான பணியைச் செய்துவருகிறது. இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியன் ஓவர்சீஸ் வழங்க தயாராக இருக்கிறது' என்றார்.
நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பங்கேற்ற விழுப்புரம் சரக டிஐஜி வினித்தேவ் வான்கேடே பேசுகையில்,
"உலகின் ஒரு மூலையில் உள்ள எங்கோ ஒருவர் எழுதிய புத்தகத்தை நாம் படிக்கும் போது, அவர் நம் முன்னே இருந்து பேசுவதைப் போன்று இருக்கும். புத்தகத்தால் மட்டுமே அமைதியான முறையில் லட்சக்கணக்கானோர் மனதுக்குள் சென்று ஒரு கருத்தை பதியவைக்க முடியும். எனவே புத்தகத்தை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்' என்றார்.நிகழ்ச்சியில் எழுத்தாளர் ச. பெரியண்ணன் பாராட்டப்பட்டார். ஆப்பிள் பப்ளிஷிங் இன்டர்நேஷனல் பதிப்பகத்தார் கெüரவிக்கப்பட்டனர். நடிகர் கிரேஸி மோகனின் நாடகம் கலை நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக