உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 11, 2011

கடலூரில் மணல் விலை ஏற்றம்: கட்டுமானப் பணிகள் பாதிப்பு


கடலூர் பெண்ணை ஆற்றில் மணல் எடுத்து வரும் மாட்டுவண்டிகள்.
கடலூர்:

         கடலூரில் திடீரென ஆற்று மணல் விலை கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, கட்டுமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.  

              கடலூரில் 6 மாதங்களுக்கு முன்பு வரை மாட்டுவண்டி மணல் ரூ. 350 க்கும், ஒரு லாரி மணல் (3 யூனிட்) ரூ. 2 ஆயிரத்துக்கும் கிடைத்து வந்தது. மழை காலத்தில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது மணல் எடுப்பதில் சிரமம் இருப்பதால் அத்தகைய காலங்களில் மணல் விலை உயர்வது உண்டு. ஆனால் நல்ல கோடை காலத்தில் கடலூரில் மணல் விலை அபரிமிதமாக உயர்ந்து வருவது, வீடு கட்டுவோரையும், ஒப்பந்ததாரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.  கடலூரில் தற்போது மாட்டு வண்டி மணல் ரூ. 1,000 ஆகவும், ஒரு லாரி மணல் (3 யூனிட்) ரூ. 8 ஆயிரமாகவும் உள்ளது. 

              சில தினங்களுக்கு முன் நெல்லிக்குப்பத்தை அடுத்த, பட்டாம்பாக்கம் பெண்ணை ஆற்றில் புதிதாக மணல் குவாரி தொடங்கப்பட்டு உள்ளது.  இங்கு இருந்து கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் மணல் கிடைக்கிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் ஒரு லாரி மணல் ரூ. 5 ஆயரம் முதல் ரூ. 6 ஆயிரமாக உள்ளது. பண்ருட்டியில் மாட்டு வண்டி மணல் விலை ரூ. 350 ஆகவும், ஒரு லாரி மணல் ரூ. 2 ஆயிரம் ஆகவும் உள்ளது. திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் டிராக்டர் இழுக்கும் டயர் வண்டி மணல், ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும், ஒரு லாரி மணல் ரூ. 2 ஆயிரத்துக்கும் கிடைக்கிறது. ஆனால் கடலூரில் மட்டும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, ஏன் இந்த விலை ஏற்றம் என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்.  

               கடலூரில் கெடிலம் ஆறு, பெண்ணையாறு ஆகியவை கடலூர் நகராட்சி வழியாக ஓடிக் கடலில் கலக்கின்றன. கெடிலம் ஆற்றில் மணல் எடுக்க, ஏனோ அனுமதிக்க வில்லை. மணல் விலை ஏற்றம் காரணமாக, கடலூர் கட்டுமானச் செலவுகள் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. மணல் விலை உயர்வால் நகராட்சி மற்றும் அரசு கட்டுமானப் பணிகளில், உப்பங்கழிப் பகுதிகளில் காணப்படும் உவர் மண்ணையும், ஆற்றங்கரைகளில் உள்ள தரம் குறைந்த மண்ணையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள், ஒப்பந்ததாரர்கள்.  

                 இதனால் அரசுக் கட்டடங்கள் மற்றும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை சிமெண்ட் சாலைகளின் தரம் படுமோசமாகிக் கொண்டு இருக்கிறது. இத்தனை மோசமான மணலைக் கொண்டு கட்டப்படும் கடலூர் பாதாளச்சாக்கடை திட்டப் பணிகளின் கட்டுமானங்கள் என்னவாகும் என்ற கவலையும் கடலூர் மக்களுக்குத் தோன்றி இருக்கிறது.  கடலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள நத்தப்பட்டு பெண்ணை ஆற்றில் அள்ளப்படும் மணலுக்கு, மாட்டு வண்டிக்கு பொதுப்பணித்துறை வசூலிக்கும் கட்டணம் ரூ. 48 மட்டுமே. கடலூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டாம்பாக்கம் பெண்ணை ஆற்றுக் குவாரியில், மணல் அள்ளும் லாரிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 650 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 

              ஆனால் இந்த லாரிகளும், மாட்டு வண்டிகளும் கடலூர் மக்களிடம் அபரிமிதமாகக் கட்டணம் வசூலிப்பதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.  நுகர்வோருக்கு ஏற்பட்டு இருக்கும் மணல் விலை ஏற்றத்தால், அரசுக்கு வருவாய் அதிகாரித்தால்கூட மக்கள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இடைத்தரகர்கள்தான் மணல் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள், மணல் சப்ளை செய்யும் லாரி உரிமையாளர்கள்.  மேலும் மணல் எடுத்து வரும் வழியில் உள்ள கிராமங்களில், செல்வாக்கு மிக்க நபர்கள் மாட்டு வண்டிகளிடம், கோயில் விழாக்களுக்காக என்று கூறி, ஒரு நடைக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை வசூலிக்கிறார்கள். 

              அதற்கு ரூ. 20 க்கு ரசீதும் கொடுக்கிறார்கள். பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஆற்றில், பணம் செலுத்தி மணல் அள்ளுவோரிடம், இத்தகைய நபர்கள் பணம் வசூலிக்க அனுமதி அளித்தது யார் என்று தெரியவில்லை. 

 மணல் விலை ஏற்றம் குறித்து, லாரி உரிமையாளர் சங்கர் கூறுகையில், 

                பட்டாம் பாக்கத்தில் கடந்த ஒரு வாரமாக குவாரி செயல்படுகிறது. இக்குவாரியை இடைத் தரகர்கள் சிலர் கைப்பற்றிக் கொண்டு, மற்ற லாரிகளை உள்ளே அனுமதிப்பது இல்லை. வெளியூர்களில் இருந்து செல்லும் லாரிகள், ஒரு லோடு மணலுக்காக, 3 நாள்கள் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.  அப்பகுதித் தரகர்கள் பெருவாரியாக மணல் எடுத்து, தங்கள் சொந்த இடங்களில் கொட்டி வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதுவே மணல் விலை உயர்வுக்குக் காரணம். இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, மாட்டு வண்டிக்காரர்கள் விலை உயர்த்தி விட்டனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.     




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior