கடலூர்:
கடலூரில் உருவாகி வரும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், சிப்காட் சமூகச் சுற்றுச் சூழல் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம், நிர்வாகிகள் ராமநாதன், புகழேந்தி, சிவசங்கர், அமிர்தலிங்கம் ஆகியோர் வியாழக்கிழமை கூறியது:
கடலூர் அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சுமார் ரூ. 10 ஆயிரம் கோடியில் இந்த தனியார் ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது. 1999 முதல் இந்த ஆலை தொடர்ந்து விதிமீறல்களைச் செய்து வருகிறது. கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் அனுமதியின்றி பல கட்டுமானங்களைச் செய்து வருகிறது. கடலில் சிறிய துறைமுகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்கைத் துறைமுகங்கள் அமைக்கப்படுவதால் பல கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு, மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விதி மீறல்கள் குறித்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல முறை மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கும் புகார்கள் அனுப்பி உள்ளன. ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
1999-ம் ஆண்டு அளித்த புகார்களின் பேரில், மாசு கட்டுப்பாடு வாரியம் விதி மீறல்கள் குறித்து, அறிக்கை மட்டும் அனுப்பியது. நடவடிக்கை இல்லை. சமீபத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், இந்த நிறுவனம் கடலுக்குள் 450 மீட்டர் நீளம், 6 மீட்டர் ஆகலம் கொண்ட பாலம், கடலில் 261 மீட்டர் நீளம் கொண்ட மற்றொரு கட்டுமானம், கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் 4 ஷெட்டுகள் அனுமதியின்றிக் கட்டடப்பட்டு இருப்பதாக, 6-7-2011 தேதியிட்ட அறிக்கை, இந்த ஆலைக்கு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அளிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, விதிகளை மீறியும், அனுமதியின்றியும் கட்டுமானங்களை மேற்கொண்ட போதிலும், தற்போதுதான் விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தொழிற்சாலைகள் வேண்டாம் என்பது எங்களது கோரிக்கை அல்ல, கொள்கையும் அல்ல. ஆனால் அனைத்தும் விதிகளுக்கு உள்பட்டு நடக்கவேண்டும். மாசு கட்டுப்பாடு வாரியமும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும் விதிமுறைகளை வகுத்து விட்டு, அவற்றைப் பின்பற்றாத ஆலைகள் மீது, நடவடிக்கை எடுக்கத் தவறுவதையுமே கண்டிக்கிறோம். விதிகள் மீறப்படுவதாலேயே சுற்றுச்சூழல் மாசுபடுவதும், கடலோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது. எனவே தவறு செய்து வரும் இந்நிறுவனத்தின் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனுமதியின்றி மேற்கொண்டு எந்தக் கட்டுமானும் நடக்காதவாறு, சீல் வைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறிய மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மீதும் அரசு வழக்குத் தொடர வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டு உள்ளோம் என்றும் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக