பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை மாநில அளவில் ஒருங்கிணைந்த பட்டியலாக வெளியிடப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் எழுந்துள்ளது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கல்வித் தரம் குறித்த ரேங்க் பட்டியலை வெளியிட வேண்டும் என மணச்சநல்லூரைச் சேர்ந்த என். ராம் பிரசாத் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கல்லூரிகளின் ரேங்க் பட்டியலை வெளியிடுமாறு சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டது.
இதன்படி, சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், அதன் கீழ் இணைப்பு பெற்றுள்ள 6 மாவட்டங்களைச் சேர்ந்த 167 கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியலை, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. மற்ற பல்கலைக்கழகங்களும் இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் அந்தந்த பல்கலைக்கழகங்கள் தனித்தனியே தங்களிடம் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளை தரவரிசைப் படுத்தி வெளியிடுவது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் இதேபோன்று தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு வந்தது. ஆனால், அப்போது மாநில அளவிலான ஒருங்கிணைந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போது அந்தந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தங்களிடம் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இது தரமான கல்லூரியை தேர்வு செய்ய மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றபோதும், மாநில அளவிலான தர வரிசைப் பட்டியல் வெளியிடுவதே சிறந்தது என்றார்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியது:
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஒருங்கிணைந்த தர வரிசைப் பட்டியலை வெளியிடுவதுதான் சரியானது. முன்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற நடைமுறையைத்தான் பின்பற்றி வந்தது. இப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டு, ஐந்து அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்கள் தனித் தனி தேர்வு முறைகளையும், மதிப்பீடு முறைகளையும் கையாண்டு வருகின்றன. மேலும் சென்னையில் 92.19 தேர்ச்சி விகிதம் பெற்ற கல்லூரி முதல் ரேங்க் பெற்றுள்ளது.
இதேபோல் மற்ற பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளில் 85 சதவீத தேர்ச்சி விகிதம்தான் அதிகபட்சம் என்றால், அந்தப் பல்கலைக்கழகம் வெளியிடும் பட்டியலில் 85 சதவீத தேர்ச்சி பெற்ற கல்லூரி முதல் ரேங்க்கில் இருக்கும். எனவே, ஒரே மாதிரியான தேர்வு முறை, மதிப்பீடு முறை இருக்கும் நிலையில் வெளியிடப்படும் கல்லூரி தர வரிசைப் பட்டியல்தான் நியாயமானதாக இருக்க முடியும். இதுபோன்று தனித் தனியாக தர வரிசைப் பட்டியலை வெளியிடுவது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியல்
College Ranking based on Pass in All Subjects
College Ranking based on Pass in No. of Scripts
College Ranking based on Year of Establishment
Internal and External Evaluation Comparison
0 கருத்துகள்:
கருத்துரையிடுக