திட்டக்குடி:
விருத்தாசலத்தை அடுத்துள்ள சத்தியவாடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி இரவு மர்ம ஆசாமிகள் சிலர் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கே இருந்த 5 சிலைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வேப்பூர் அருகே உள்ள திருப்பயர் கிராமத்தில் உள்ள ஊர் எல்லையில் ஏரிக்கரையில் முட்புதரில் துணியால் கட்டப்பட்டு முட்டைகள் கிடந்தன. அப்பகுதியாக சென்ற ஊர்மக்கள் இதைப்பார்த்து வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வேப்பூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு பாலு மற்றும் போலீசார் அந்த முட்டை களை எடுத்து வந்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து பிரித்து பார்த்தனர். அதில் சிலைகள் இருந்தன. வேப்பூர் போலீசார் விருத்தாசலம் போலிஸ் துணை சூப்பிரண்டு அறிவழகனுக்கு தகவல் கொடுத்து சத்தியவாடி சிவன் கோயிலில் திருட்டு போன சிலைகளாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு அந்த கோயிலின் அறங்காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அறங்காவலர்கள் இந்த சிலைகளை பார்த்து திருட்டுப்போன சிலைகள் தான் என உறுதி செய்தனர். தொடர்ந்து ஈஸ்வரன் கோவிலில் இருந்த போட்டோக்களை ஒப்பிட்டு அவை திருட்டுப்போன சிலைகள் என உறுதி செய்யப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக