உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

கடலூரில் பெண் ஒருவருக்கு விஜயா வங்கி நஷ்ட ஈடு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

கடலூர்:

               வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் பெண் ஒருவர் அளித்த காசோலையை, கணக்கில் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பிய வங்கி, பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

               கடலூர் வங்கி ஊழியர்கள் நகரில் வசிப்பவர் பெரியசாமி மகள் கவிதா. அவருக்கு கடலூர் விஜயா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. நிதி நிறுவனம் ஒன்றில் பெற்று இருந்த தனிநபர் கடனுக்கு, மாதம்தோறும் விஜயா வங்கியின் சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ. 1,978 பெற்றுக் கொள்ளும் வகையில் கவிதா காசோலைகளை வழங்கி இருந்தார். 5-9-2009 நாளிட்ட காசோலையை விஜயா வங்கிக்கு, நிதி நிறுவனம் அனுப்பியபோது, கவிதாவின் கணக்கில் போதிய பணம் இல்லை என்று, காசோலை திரும்பி விட்டது. ஆனால் அன்றைய தேதியில் விஜயா வங்கியில், கவிதாவின் சேமிப்புக் கணக்கில் ரூ. 2,772 இருந்தது.  காசோலை பணமின்றி திரும்பியதால் நிதிநிறுவனம் கவிதாவுக்கு ரூ. 250 அபராதம் விதித்தது. அபராதம் கட்டத் தவறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியதால் கவிதா அபராதத் தொகையை செலுத்த நேரிட்டது. 

                 இதுகுறித்து வங்கிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது மட்டுமன்றி, காசோலை திரும்பியதற்காக விஜயா வங்கி, கவிதாவின் கணக்கில் இருந்து ரூ. 85 பிடித்தம் செய்தது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இருந்தும், காசோலை திருப்பி அனுப்பப்பட்டது. வழக்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பா.ஜெயபாலன், உறுப்பினர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் விசாரித்து அண்மையில் தீர்ப்பு கூறினர். வங்கியின் கணினியில் ஏற்பட்ட தவறு என்றும், வங்கி ஊழியர் உள்நோக்கத்துடன் செய்யவில்லை என்றும் வங்கி சார்பில் வாதிட்டதை நீதிமன்றம் ஏற்கவில்லை.  

                    மன உளைச்சலுக்காக ரூ. 4 ஆயிரம், அவருக்கு நிதி நிறுவனம் விகித்த அபராதத் தொகை ரூ. 250 மற்றும் காசோலை திரும்பியதற்காக வங்கி வசூலித்த ரூ. 85, வழக்கு செலவுத் தொகை ரூ. 500 ஆகியவற்றைச் சேர்த்து விஜயா வங்கி பாதிக்கப்பட்ட கவிதாவுக்கு ரூ. 4,335-யை 2 மாதத்தில் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.7-9-2009ல் இருந்து இத்தொகையை, 10 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கவிதாவுக்காக, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், நுகர்வோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார். 0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior