உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 11, 2011

ரூ. 30 கோடியில் கடலூரில் கரைகள் பலப்படுத்தும் திட்டம்


கடலூர் ஆல்பேட்டை அருகே நகராட்சி கரும காரிய கொட்டகையின் குறுக்காகப் போடப்பட்டிருக்கும் பெண்ணையாற்றின் தெற்குக் கரை. க
கடலூர்:

           கரைகள் பலப்படுத்தும் திட்டத்தில் கடலூரில் ரூ. 30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆற்றங்கரைகள், அரைகுறையாகப் போடப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.  

              கெடிலம், பெண்ணையாறு ஆகியன கடலூர் நகருக்குள் புகுந்து வங்கக் கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் கடலூர் நகராட்சி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து, நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைகின்றன.  விளைநிலங்களும் அடித்துச் செல்லப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் அரசு இழப்பீடு வழங்க வேண்டியது இருக்கிறது. இதனால் ரூ. 30 கோடியில், பெண்ணையாறு கெடிலம் ஆறு ஆகியவற்றின் கரைகளை பலப்படுத்தும் திட்டம், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.  தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவு அடைந்து விட்டன.

                இரு ஆறுகளின் கரைகளிலும் 4 சக்கர வாகனங்கள் சென்று வருவதற்கு வசதியாக, சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கரைகளுக்கு மேல் சுமார் 3 அங்குல கனத்தில் சரளைக் கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளன.  இக்கரைகளின் வலிமை எத்தகையது என்பது வரவிருக்கும் வடகிழக்குப் பருவ மழையின் போதுதான் உறுதிபடுத்தப்படும். மேலும் கரைகள் பல இடங்களில், அமைக்கப்படாமல் விடுபட்டுள்ளன.   குறிப்பாக கெடிலம் ஆற்றில் கம்மியம்பேட்டை பாலம் அருகே இரு கரையிலும், தலா 100 மீட்டர் தூரத்துக்குக் கரைகள் அமைக்கப்படவில்லை. இப் பகுதியில்தான் ஆண்டுதோறும் கெடிலம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு, பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

               கரைகள் அமைக்கப்படாத பகுதிகளில் இருந்து, ஆற்று வெள்ளம் நகருக்குள் புகும் அபாயம் நிறைய இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.  மேலும் ஆல்பேட்டை அருகே பெண்ணை ஆற்றங்கரையில் சுடுகாடு அருகே, நகராட்சி பல லட்சம் செலவில் கட்டியிருக்கும் கரும காரியக் கொட்டகையை மூழ்கடித்துக் கரை அமைக்கப்பட்டு உள்ளது. வெள்ளக் காலங்களில் இதன் வழியாக மஞ்சக்குப்பம் பகுதிக்குள் வெள்ளம் புகவும், கரும காரியக் கொட்டகை இடிந்து, வெள்ளத்தில் அடித்துக் செல்லும் அபாயமும் உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.  

இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்கக் கூட்டடைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 

                கெடிலம், பெண்ணை ஆறு ஆகியவற்கு தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் கரைகள் பல இடங்களில் விடுபட்டுள்ளன. இது மிகவும் ஆபத்தானது. அப்பகுதிகள் வழியாக நகருக்குள் வெள்ளம் புகுந்து, பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  ஆல்பேட்டையில் பெண்ணை ஆற்றங்கரையில், நகராட்சி கருமாதிக் கொட்டகையின் குறுக்காக, கரை அமைக்கப்பட்டு இருப்பது, கரும காரியங்கள் நடத்துவோருக்கு இடையூறாக அமைந்துள்ளது. இதனால் கரும காரியக் கொட்டகை வெள்ளத்தில் அடித்துச் செல்லும் அபாயமும், அதன் வழியாக ஊருக்குள் வெள்ளம் புகும் ஆபத்தும் உள்ளது.  ஆக்கிரமிப்புகள் அகற்றப் படாமல், இருப்பது இருக்கிறபடியே கரைகள் அமைக்கப்படுவதாலும், தனி நபர்களின் நிர்ப்பந்தம் காரணமாகவும் இவ்வாறு கரைகள் அரைகுறையாக அமைக்கப்படுகின்றன. 

                 இதனால் மக்கள் வரிப் பணம் வீணாகிறது. எதிர்பார்த்த வெள்ளப் பாதுகாப்பு, மக்களுக்குக் கிடைக்க வில்லை என்றார்.  

இதுகுறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சின்னராஜ் கூறியது 

                    மேற்கண்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கரைகள் பலப்படுத்தும் பணிகளைப் பார்வையிட சிறப்புக் குழு ஒன்று வர இருக்கிறது என்றார்.  




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior