மனித வாழ்க்கையில் எதிரி எனப்படுவதில் முதலிடம் வகிப்பது எலிதான். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் சேதப்படுத்துவதும், பிளேக் என்ற நோயையும் பரப்பி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதிலும் எலிகள் முதலிடம் வகிக்கின்றன.
உலக அளவில் ஆண்டுதோறும் 40 மில்லியன் டன் உணவை எலிகள் சேதப்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.பெரியாறு- வைகை பாசனத்தில் தற்போது 45 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் கதிர் வெளிவிடும் தருணத்தில் உள்ளன. இதில் எலிகளைக் கட்டுப்படுத்துவதில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்துமாறு மதுரை வேளாண்மை அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நடவு செய்து ஒரு மாதம் கடந்த நெற்பயிரில் 40 டிகிரி சாய்வாக சிம்புகளை வெட்டி சேதப்படுத்தினால் அது எலிகள் நடமாட்டத்தின் அறிகுறியாகும். நெற்பயிரின் சிம்புகளில் எலிகள் தாய்மையடைவதற்கான சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனால், எலிகள் நடமாட்டம் வரப்பில் அதிகம் இருக்கும். இதையடுத்து அதன் வலைகளைக் கண்டறிய வேண்டும். ஒரு ஹெக்டரில் 50 வலைக்கு மேல் இருந்தால் எலியினால் சேதம் அதிகம் இருக்கும்.எனவே, தின்றவுடன் மரணத்தை ஏற்படுத்தும் துத்தநாக பாஸ்பேட்டை ஒரு கிராமுக்கு 40 கிராம் உணவுப் பொருளுடன் (வறுத்த அரிசி, குருணை) சிறிதளவு தேங்காய் எண்ணெய்யும் கலந்து சிறு குச்சியால் கிளறி விட்டு அதை 10 கிராம் கொண்ட பாக்கெட்டுக்களாக தயாரிக்க வேண்டும்.
ஒரு எலி வலைக்கு ஒரு பாக்கெட் வீதம் உள்ளே போட வேண்டும். இவ்வாறு மருந்து கலந்த உணவுப் பாக்கெட்டை வைப்பதற்கு முன்னதாக, மூன்று நாள்களுக்கு மருந்து கலக்காத உணவை 20 கிராம் பாக்கெட்டுகளாக வலைகளில் வைக்க வேண்டும். இதுதவிர 2 பங்கு புரோமோடையலோன் மருந்தை 96 பங்கு அரிசிக் குருணையையும் மொத்தத்தில் 2 பங்கு சமையல் எண்ணெய்யைக் கலந்து 10 கிராம் பொட்டலங்களாகத் தயாரித்து எலி வலைகளில் ஒவ்வொரு பொட்டலமாகப் போடலாம்.ஒரு ஹெக்டரில் மிகவும் குறைவான எலி வலைகள் காணப்பட்டால் வயலில் தஞ்சாவூர் கிட்டி அல்லது முதுகு ஒடிக்கும் பொறி வைத்து எலிகளைப் பிடித்துக் கொல்லலாம்.
மேலும், சிறிய குச்சியில் வைக்கோல் சுற்றி வயலில் ஆங்காங்கே நட்டு வைக்க வேண்டும். இந்த குச்சி மீது ஆந்தைகள் இரவில் வந்து அமர்ந்து எலிகளை வலையிலிருந்து வெளி வரும்போது கவ்விப்பிடித்து கொன்று தின்றுவிடும்.3 கிராம் எடையுள்ள அலுமினியம் பாஸ்பைடு என்ற நச்சு வாயு மாத்திரைகளை எலி வலைகளில் ஆழமாக உள்ளே போட்டு எலி வலை துளை வாயிலை களிமண்ணால் மூடிவிட வேண்டும். சற்று தொலைவிலும் அதன் வெளிவரும் வலையைக் கண்டுபிடித்து கனிமண்ணால் மூடிவிட வேண்டும்.இந்த மாத்திரையிலிருந்து வரும் பாஸ்மின் நச்சுவாயு எலிகளையும் வலையிலுள்ள குட்டிகளையும் கொல்லும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நெல் வயல்களில் எலிகளைக் கட்டுப்படுத்துவதில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மதுரை வேளாண்மை அறிவியல் மையத் தலைவர் நா.சோ.வெங்கட்ராமன், பேராசிரியர் கோ.ஸ்ரீநிவாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக