உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், செப்டம்பர் 08, 2011

நச்சுத்தன்மை வாய்ந்த பார்த்தீனியம் செடிகளின் திப்புகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்

               பார்த்தீனியம் செடி நச்சுத்தன்மை வாய்ந்த ஓராண்டு தாவரமாகும். இச் செடியின் அனைத்துப் பாகங்களும் நச்சுத்தன்மை கொண்டு குறுகிய காலத்தில் விரைவாக வளர்ந்து மிக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
                    பார்த்தீனியம் தமிழகத்தில் அதிகளவில் பரவி வருவதாக மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய களைகள் ஆராய்ச்சி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 1980-ம் ஆண்டுமுதல் இந்தியாவில் 80 லட்சம் ஹெக்டேரில் இவை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கன்றன. 
பார்த்தீனியத்தின் தோற்றம், பரவுவதற்கான காரணங்கள், பாதிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் முனைவர் சீனி.அன்புமணி மற்றும் ஆராய்ச்சியாளர் ந.பாரதி கூறியதாவது:
               பார்த்தீனியம் செடியின் பூர்வீகம் அமெரிக்காவாகும். 1955-ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது தானியத்துடன் கலந்து இந்தியாவில் புகுந்தது. ஓராண்டு தாவரமான பார்த்தீனியம் ஆஸ்திரேலிய குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது 1 மீட்டர் முதல் 1.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகளானது பல பிரிவுகளாக பிரிந்து பார்ப்பதற்கு கார்னேசன், சாமந்தி மற்றும் கேரட் இலைகளை போல் இருக்கும். இதை கேரட் களை மற்றும் காங்கிரஸ் களை என்றும் அழைப்பர். இது வெள்ளி நிற பூக்கள், மிகச் சிறிய விதைகளை கொண்டிருக்கும்.
காணப்படும் இடங்கள்: 
                மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத குறிப்பாக தரிசு நிலங்கள், சாலையோரம், இருப்புப் பாதையை ஒட்டிய பகுதிகள், நீர் நிலங்கள் சுற்றியுள்ள இடங்களில் முதலில் காணப்பட்டாலும் 1980-க்குப் பிறகு விவசாய நிலங்களிலும் தோன்றி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 
பரவுவதற்கான காரணங்கள்: 
            பார்த்தீனிம் குறுகிய காலத்தில் முளைத்து வளர்ந்து 28 நாளுக்குள் செடியாகி விடும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் ஓராண்டுக்குள் பல தலைமுறைகளை உருவாக்கும் தன்மை கொண்டது இவை. ஒவ்வொரு செடிகளிலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான மிகச் சிறிய விதையை கொண்டு எளிதில் காற்றின் மூலமும், பண்ணைக் கருவிகள், வாகனங்கள், கால்நடைகள் மூலம் பரவக்கூடியது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மண்ணுக்குள் 100 சதவீத வீரியத்துடன் பல ஆண்டுகள் இருந்து தக்க ஈரப்பதம் வரும்போது முளைக்கும் தன்மை கொண்டது. இதற்கு விதை உறக்கம் கிடையாது. குறிப்பாக ஆண்டு மழையளவு 500 மி.மீட்டருக்கு பெய்யும் பகுதிகளில் அதிகளவு காணப்படும். செப்டம்பர் மாதம் இதற்கு மிகுந்த ஏற்ற காலமாகும்.
மனிதர்களுக்கு பாதிப்புகள் என்ன என்ன? 
                இதிலுள்ள பார்த்தீனின் மற்றும் அம்புரோசின் நச்சுப் பொருட்களால் தோல் அரிப்பு, கொப்புளங்கள்,எக்சிமா ஆகிய தோல் வியாதிகளும், கண் எரிச்சல், மூச்சுத்தினறல்,உடல் ஒவ்வாமை, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற வியாதிகளும் மனிதர்களுக்கு உண்டாக்குகின்றன.
கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்: 
            கால்நடைகள் இவற்றை விரும்பி உண்பதில்லை. ஆனால் புல் மற்றும் தீவனம் கிடைக்காத கோடை காலங்களில் சிறு அளவு சாப்பிட நேர்கிறது. இதனால் கால்நடைகளுக்கு அதிக அளவு உமிழ் நீர் சுரத்தல், வயிற்றுப் போக்கு,பசியின்மை, தோல் அரிப்பு,முடிகொட்டுதல்,தோலில் திட்டுத்திட்டாக நிறம் மாறுதல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
வேளாண் பயிர்களில் இதன் பாதிப்பு: 
             இது எல்லா வகையான தானியம், பயிறு வகைகள், காய்கறிப் பயிர்கள், புல்வெளிகள் என எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கின்றன. இது பயிரின் வளர்ச்சியை பாதிக்ககூடிய வேதிப் பொருட்களை கொண்டுள்ளதெனவும்,வேர் கசிவு மண்ணில் இலைகள் மட்குதல் மூலம் ஏற்படும் மாற்றங்களால் பல்வேறு பயிர்களில் முளைப்புத் திறன் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 
சுற்றுப்புற பாதிப்புகள்: 
                 தேசிய நெடுஞ்சாலைகள், சுற்றுலாத் தலங்கள்,மேலும் பள்ளி போன்ற மக்கள் கூடும் இடங்களில் தோன்றி சுற்றுப்புற சீர்கேடுகளையும் அழகின்மையையும் ஏற்படுத்துகின்றன. மேலும் பயன்தரக்கூடிய மருத்துவ குணமுள்ள கீரை, மூலிகைகளையும் அதிகளவில் பாதிக்கின்றன.

கட்டுப்படுத்தும் விதம்: 

               செடியை பொறுத்தவரையில் பல்வேறு முறைகளை கையாளுவதன் மூலமே அழிக்க முடியும்.

இயந்திரவியல் முறைகள்: 

              மனிதர்களால் கையால் பிடுங்கி அழிப்பது மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு செலவினங்களும் அதிகரிக்கும். எனவே இக்களையின் விதை வங்கியை கருத்தில் கொண்டு மண்ணில் உள்ள விதைகளை முளையவிட்டு பூப்பதற்கு முன்பு உழவு செய்ய வேண்டும். இதன் மூலம் இக்களையின் எண்ணிக்கையை வருங்காலங்களில் குறைக்க முடியும்.

மாற்றுப் பயிர்கள் வளர்ப்பது: 

             உயரமாக வளரக்கூடிய சோளம், மக்காச்சோளம் மற்றும் கம்பு போன்ற பயிர்களை வளர்க்கும் போது களையெடுப்பது அவசியம். மேலும் இப்பயிர்களும் பார்த்தீனியக் களையின் தாக்கத்தை குறைக்கும். பயிர்சுழற்சி முறையில் சாமந்தி, பயிரிடுதல் மூலம் இதன் வளர்ச்சியை குறைக்கமுடியும். உயிரியல் முறையில் கட்டுப்பாடு: பார்த்தீனியம் களையை கட்டுப்படுத்த புதிய ஒட்டுண்ணிகளை விட வேண்டும். இதில் 40 வகை ஒட்டுண்ணிகள் அடங்கும். மேலும் பக்சீனியா அப்ரப்டா வார் பார்த்தீனிகோலா என்ற பூஞ்சாணம் உயிரியல் கட்டுப்பாட்டின் மூலம் 3-4 ஆண்டுகளில் இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

ரசாயன முறை: 

                   பார்த்தீனியம் முளைப்பதற்கு முன்பு 2.5 கிலோ அளவில் ஒரு ஹெக்டருக்கு அட்ரசின் மற்றும் பார்த்தீனிய செடி முளைத்து பூப்பதற்கு முன்பு ஒரு லிட்டர் நீருக்கு 200 கிராம் சமையல் உப்பு மற்றும் ஒரு மில்லி சோப்பு திரவம் பயன்படுத்தி பயிர் அல்லாத இடங்களில் தேர்வு திறனற்ற களைக்கொள்ளிகளை கொண்டு கட்டுப்படுத்த இயலும். இந்த ரசாயன முறைகளில் ஏதேனும் ஒன்றை அவரவர் சூழ்நிலைக்கேற்ப தேர்வு செய்து கைத்தெளிப்பான் மூலம் செடிகளில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior