விருத்தாசலம்:
மடிக்கணினியை கொண்டு மாணவர்கள் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அரசு பள்ளியில் சனிக்கிழமை நடந்த மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் சம்பத் பேசினார்.
இதில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் சம்பத் ஆகியோர் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினர்.
விழாவில் அமைச்சர் செல்விராமஜெயம் பேசியது:
இந்த மடிக்கணினியை பயன்படுத்தி தங்கள் கல்வி அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும். எனது பிள்ளைகள் கூட மடிக்கணினி கேட்டார்கள். என்னால் அப்போது வாங்கித்தர முடியவில்லை. ஆனால், இன்று ஜெயலலிதா அன்னையாக இருந்து மடிக்கணினி வழங்கி இருக்கிறார். அவருக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் சம்பத் பேசியது:
மடிக்கணினி வழங்கும் திட்டம் மகத்தான திட்டமாகும். ஏழை மாணவர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். முதல்வர் உங்களுக்கு உற்றத்தாயாக இருந்து மடிக்கணினி வழங்குகிறார். பாடங்களில் உள்ள சந்தேகங்களை கண்டறிந்து நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். மாணவர்கள் இடைநிற்கக்கூடாது. அதற்காகத்தான் இந்த மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களைவிட நீங்களும் சிறப்பாக பயின்று தேர்ச்சிபெற முடியும். மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினியில் தனியாக சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதை யார் வாங்கிப் பயன்படுத்தினாலும் கண்டுபிடித்துவிடுவோம். மாணவர்கள் மடிக்கணினியை பயன்படுத்தி உலக நடப்புகளைக் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி, முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்டக் கல்வி அலுவலர் பத்ரூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக