ரயிலில் பயணிகளிடம் திருட்டு போவதை தடுக்க வேண்டி ரெயில்வே போலீசார் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை தொடங்கி உள்ளனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். தென்மாவட்டம் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்தும் சென்னை வரும் பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ரெயில்களில் பயணிகளின் பொருட்கள் திருடு போவதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை ரெயில்வே போலீசார் தொடங்கி உள்ளனர். ரெயில் சென்று கொண்டிருக்கும் போது பயணிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனே 99625-00500 என்ற செல்போன் எண்ணை டயல் செய்து ரெயில்வே போலீஸ் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இது இலவச இணைப்பு ஆகும்.
தற்போது ரெயில்வே போலீசாரின் இந்த இலவச உதவி மைய எண் குறித்த நோட்டீசு ரெயில்களில் ஒட்டப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில்களிலும் இந்த உதவி மைய எண் ஒட்டப்படுகிறது. இந்த உதவி மையம் இன்று முதல் செயல்படுகிறது. குறிப்பாக பயணிகளிடம் திருட்டு போவதை தடுக்க வேண்டி இந்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக