
கடலூர்:
கடலூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மத்திய மந்திரி ஜி.கே. வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அமைப்புகளுக்கான தேர்தல் மிக முக்கியமான கட்டத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி 43 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆதரவால் திராவிட கட்சி ஆண்டதோடு நிறைய உள்ளாட்சி இடங்களையும் கைப்பற்றியது.
தமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்கள் செயல்பாடுகள் மக்களின் எண்ணத்திற்கு ஏற்றவாறு இல்லை. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் செயல்படுவார்கள். மக்களால், மக்களுக்காக தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர்கள்.இந்த உயர்ந்த நிலையை உருவாக்கிய காங்கிரசையும், ராஜீவ்காந்தியையும் வாக்காளர்கள் மறந்து விடக் கூடாது. உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்தும் வகையில் காங்கிரசார் செயல்படுவார்கள்.
மத்தியில் சோனியாகாந்தி வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசின் திட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசின் கிராமப்புற, நகர்புற வளர்ச்சிக்கு உறுதுணை யாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்த வரையில் மாநகராட்சி, நகராட்சி கிராமங்களுடைய வளர்ச்சி குறித்து மத்திய அரசு அக்கறை கொண்டு உள்ளது. மேலும் பல திட்டங்களுக்கு பல கோடி ஒதுக்கி தமிழகத்தில் கிராமப்புற, நகர்புற வளர்ச்சிக்கு அடித்தளமாக செயல்படு கிறது.
இதனை பெருமையுடன் கூறுகிறேன். இதற்கு உதாரணமாக அகில இந்திய திட்டங்கள் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க கூடிய பலதிட்டம் உள்ளது. பாரத நிர்வாண் திட்டம் மூலம் நகரங்கள் அருகாமையில் உள்ள கிராமத்தில் நகரங்களுக்கு கிடைக்ககூடிய அனைத்து வசதிகளும் கிடைக்க ரூ.58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தனர். இந்த நிதி கடந்த ஆண்டை விட 21 சதவீதும் உயர்வாகும்.
மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் ஏழை எளிய மக்கள் அதிகளவில் பயன் பெறுகிறார்கள். இதைத்தொடர்ந்து அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக மத்திய அரசு ரூ.2 லட்சத்து 16 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், கிராமங்கள் மென்மேலும் வளருவதற்காகவும் மத்திய அரசு அடித்தளமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக