கடலூர்:
பெருமாள் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், சுமார் 500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர், தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று பெருமாள் ஏரி. மொத்த உயரம் 6.5 அடி. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த ஏரி மூலம் இருபோகம் பாசன வசதி பெறுகின்றன. மழைக் காலத்தில் பெறப்படும் நீருடன், என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீரும் பெருமாள் ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு, பாசனத்துக்குப் பயன்படுத்தப் படுகிறது. என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் கரித்துகள்கள் மற்றும் களிமண்ணால் ஏரி பெருமளவுக்குத் தூர்ந்து கிடக்கிறது. இதனால் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் விரைவில் நிரம்பி வழிந்துவிடும் நிலையில் ஏரி உள்ளது.
கடந்த ஒரு வாரமாகப் பெய்த மழையால் ஏரி நிரம்பி 2 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் பரவனாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீர், பெரும்பாலான விளை நிலங்களில் பாய்கிறது. பொதுவாக பெருமாள் ஏரி பாசனப் பகுதிகளில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாயம் செய்வதில்லை. இந்த நிலையில் கே.கள்ளையன் குப்பம், பூவாலை, அலமேலு மங்காபுரம், கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர் அறுவடைக்குத் தயாராக இருந்தது. அண்மையில் பெய்த மழையால் பெருமாள் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் புகுந்ததால், 500 ஏக்கரில் உள்ள நெற்பயிர் முழுவதும் மூழ்கி விட்டது.
வெள்ளம் உடனடியாக வடிய வாய்ப்பில்லை என்று விவசாயிகள் பலரும் தெரிவிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கள்ளையங்குப்பம் ஊராட்சித் தலைவர் வி.தேசிங்கு தலைமையில் திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லியைச் சந்தித்து மனு கொடுத்தனர். 500 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி அழுகி முளைக்கத் தொடங்கி விட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக