உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 02, 2011

கடலூரில் முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லை : ஒருங்கிணைந்த வடிகால் திட்டம் செயல்படுத்த கோரிக்கை

கடலூர்:

                முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால், கடலூரில் 100-க்கும் மேற்பட்ட நகர்களில் மழைநீர் தேங்கி, வீடுகளில் வசிப்போர் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.  வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், கடலூரில் கடந்த ஒரு வாரமாக, கனமழை பெய்து வருகிறது. 

               இதனால் அண்ணா நகர், ஆர்.வி.எஸ். நகர், ரங்கநாதன் நகர், மீனாட்சி நகர், கே.கே. நகர், துரைசாமி நகர், ஆறுமுகம் நகர், பகவந்தசாமி நகர், நேருநகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நகர்களில் மழைநீர் 3 அடி உயரத்துக்கு மேல் தேங்கியுள்ளது. தேங்கிக் கிடக்கும் நீர் உடனடியாக வழிந்தோடும் வாய்ப்பு இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டன. அவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட மண் அகற்றப் படாமல் சாலைகளிலேயே கொட்டப்பட்டது. 

             இதனால் சாலைகளின் மட்டம் ஏற்கெனவே ஒரு அடிக்கு மேல் உயர்ந்து விட்டது. அண்மையில் 100-க்கும் மேற்பட்ட சிமென்ட சாலைகள் ஒன்று முதல் 2 அடி உயரத்தில் அமைக்கப் பட்டன. இதனால் கடலூர் நகரச் சாலைகள் 3 அடி உயரம் உயர்ந்து விட்டன.  அதே நேரத்தில் கடலூரில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் எதுவும் முறையாக அமைக்கப் படவில்லை. ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் பல வடிகால் வாய்க்கால்கள்உள்ளன. பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் அகற்றப்பட்ட மண் மற்றும் பாலித்தீன் குப்பைகள் பெருமளவு விழுந்து, பல வடிகால் வாய்க்கால்கள் அடைபட்டுக் கிடக்கின்றன. வாய்க்கால்கள் பல பிரபல தனியார் பள்ளிகளாலும், தனி நபர்களாலும் ஆக்கிரமிக்கப் பட்டும் உள்ளன.

              புதிய  சாலைகள் அமைக்கும் முன்பே, பொதுநல அமைப்புகள் இப்பிரசினையை சுட்டிக் காட்டியும், நகராட்சி நிர்வாகமும், அரசும் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் குமுறுகிறார்கள்.  நகரில் சாலைகள் பலவும் சீர்குலைந்து கிடப்பதற்கு, உரிய மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததும் முக்கிய காரணமாகும். போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதாக கூறப்பட்ட பாரதிசாலை, சிதம்பரம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளின் பழைய நிலையில் எந்த மாற்றமும் காணமுடிய வில்லை. 

இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 

              நகரில் மழைநீóர் வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து கிடக்கின்றன. சாலைகளின் மட்டம் உயர்த்தப் பட்டது, கெடிலம் பெண்ணை ஆறுகளுக்கு கரைகள் அமைக்கும் போது மழைநீர் வழிந்து ஆறுகளுக்குள் செல்ல வசதியாக சிறிய பாலங்கள் ஷட்டர்கள் அமைக்கத் தவறியது மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாக, நகரில் மழைநீர் இயல்பாக வழிந்தோட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் இப்போதே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. நகராட்சி நிர்வாகம் அரசுத் துறைகளுடன் விவாதித்து ஒருங்கிணைந்த வடிகால் திட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றார்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior