கடலூர்:
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக ஜோசப் அந்தோனிராஜ் அண்மையில் பதவி ஏற்றார். தொடர்ந்து கடலூர் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் புதன்கிழமை நடந்தது.
கூட்டத்துக்குப்பின் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் கூறியது:
கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.
குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்ற உளவியல் ரீதியான பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. முதல் கட்டமாக கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி அளிப்பார்கள்.
அரசின் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தாமல் இருக்க அரசு வழங்கும் ஊக்கத் தொகைகள் மற்றும் உதவித் தொகையை முழுமையாகப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் வசந்தா, கணேசமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக