உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், டிசம்பர் 08, 2011

சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பராமரிப்பின்றி மோசமான நிலை

சிதம்பரம் :

             பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ள சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  

 இது குறித்து சட்டப்பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொறடாவும், சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே. பாலகிருஷ்ணன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதன்கிழமை அனுப்பிய மனு:

          தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சுவாமி சகஜானந்தரால் சிதம்பரம் அரசு நந்தனார் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் அதிகமான ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி அறிவு பெற்றார்கள்.  சிறப்பு வாய்ந்த இப்பள்ளிகள் மற்றும் விடுதிகள் இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கடந்த 26-7-2011-ல் விக்னேஷ் என்ற மாணவனும், 17-11-2011-ல் விமல்ராஜ் என்ற மாணவனும் தற்கொலை செய்து கொண்டனர். அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகும் நிலைமை மாறவில்லை. 

             இப்பள்ளியினை சீரமைக்க ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்த பள்ளிகள் மற்றும் விடுதிகளை சீரமைக்க இந்த நிதி போதுமானதல்ல. சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர்கள் தாமதமாகவும், தரமற்ற முறையிலும் வேலைகளை செய்து வருகின்றனர்.  இடிந்த நிலையில் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளின் கட்டடங்கள், கழிவறைகள், குளியலறைகள், சமையல் மற்றும் உணவு அறைகள், சோதனைக் கூடம், நூல் நிலையம் ஆகியவற்றை மேம்படுத்த பொறியாளர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். இதுவரை நடைபெற்றுள்ள மாணவர்களின் தற்கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். 

         தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்திட இத்துறையிலேயே தனி கல்வி இயக்குநரகத்தை உருவாக்க வேண்டும் என மனுவில் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior