விருத்தாசலம்:
விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் (வயது 53). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் சிகரெட் கம்பெனியில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விமலா (47). இவர் மொத்தமாக புடவைகளை வாங்கி வீட்டிலேயே விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக் கிழமை காலை வழக்கம்போல் தமிழ்ச்செல்வன் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் பணி முடிந்து இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு வெளி பக்கமாக பூட்டப்பட்ட இருந்ததால் விமலா வீட்டை பூட்டிக் கொண்டு கோவிலுக்கு சென்றிருக்கலாம் என கருதி விமலாவுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
ஆனால் வெகுநேரமாகியும் விமலா வராததால் சந்தேகம் அடைந்து வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். அப்போது படுக்கை அறையில் விமலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து தமிழ்ச் செல்வன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு விமலா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டனர்.
மேலும் விமலா கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 25 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.5 1/2 லட்சமாகும். யாரோ மர்ம மனிதர்கள் புடவை வாங்குவது போல் நடித்து விமலாவின் கழுத்தை அறுத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்த தமிழ்ச் செல்வன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் சீராளன், சப்- இன்ஸ்பெக்டர் திருமேணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் புருனோ மற்றும் தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விமலாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக